தேர்தலில் கூட்டணி என்பது இன்றைக்கு நேற்றைக்குத் தொடங்கியதல்ல. தேர்தல் என்ற ஒன்று சிந்தையில் உதித்துச் செயல்பாட்டுக்கு வந்ததும் கூட்டணியும் இலவச இணைப்பாக வந்து சேர்ந்தது. தேர்தலும் கூட்டணியும் இணைபிரியாத இரட்டைச் சொற்களாகி வெகு காலமாகிவிட்டன.
தேர்தலில் வெற்றி ஒன்றுதான் இலக்கு. வாக்குகளைச் சேகரிப்பது மட்டுமே லட்சியம். ஒரே ஒரு வாக்கு விட்டுப்போனாலும் அடுத்த வாய்ப்புக்காகப் பல வருடங்கள் காத்திருக்க நேரிடும். வாக்குகளைக் கைப்பற்ற வாக்குறுதிகள் தொடங்கி கூட்டணி வரை பல வியூகங்களை வகுக்க வேண்டிய தேவை அனைத்துக் கட்சிகளுக்கும் உருவாகிவிட்டது. சமூக மாற்றங்களுக்காக அமைப்புகள் உருவானதெல்லாம் வரலாறாகிப்போனது. தேர்தலுக்காகவும் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே கட்சிகள் உருவாவது வழக்கமாக மாறிவிட்டது.
ஒரு தேர்தலில் மக்களின் மனத்தை ஒட்டுமொத்தமாக மாற்றத் தெரிகிற கூட்டணிகளே அந்தத் தேர்தலில் வெற்றிபெறுகின்றன. அந்த மாற்றத்தைக் கொண்டுவரும் வழிகளை யோசிப்பதற்காகவே தனியார் நிறுவனங்கள் பல உருவாகிவிட்டன. வியூக வகுப்பாளர்கள் என்ற ஒரு புதிய பிரிவு உருவாகி கோடிகளில் வர்த்தகம் நடைபெறத் தொடங்கிவிட்டது. நிற்பது, நடப்பது, சிரிப்பது, பேசுவது எனப் பொதுவெளியில் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் திரைக்குப் பின்னால் இருந்து இயக்கப்படுகின்றன. தேர்தல் அரசியலில் இனியொரு சாமானியன் போட்டியிடுவது கிட்டத்தட்டச் சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகிவிட்டது.















Add Comment