‘பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்’ என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 2024ல் பாமகவின் சிறப்புப் பொதுக்குழு நடைபெற்றது. பாமகவின் இளைஞரணி தலைவராகப் பரசுராமன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். பரசுராமன் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன். இளைஞரணி தலைவராகப் பரசுராமன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களிடையே பொதுக்குழு மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘இது நான் தொடங்கிய கட்சி. கட்சியில் இருக்க விருப்பம் இல்லாதவர்கள் கிளம்பலாம்’ என்று ராம்தாஸ் காட்டமாகத் தெரிவித்தார். பதிலுக்கு, பனையூரில் தனிக் கட்சி அலுவலகம் தொடங்கியிருப்பதாக அன்புமணி பூடகமாகப் பேசினார்.
1980களில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி பல்வேறு அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஜூலை 1980ல் இந்த அமைப்புகள் வன்னியர் சங்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை நிறுவினார். மாநாடு, போராட்டம் என்று வன்னியர் சங்கம் வளர்ந்து வந்தது. பிரச்சாரப் பணிகளுக்காக ‘கனல்’ என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்துக் கனல் பத்திரிகையில் தலையங்கக் கட்டுரைகள் எழுதினார் ராமதாஸ். இருபது சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வன்னியர் சங்கம் போராட்டங்களை நடத்தியது. ஆளும் அரசுக்குக் கோரிக்கைகளையும் மனுக்களையும் அனுப்பியது. ஆளும் அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. வன்னியர்களின் கோரிக்கைகளைத் தேசியக் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்தது.
Add Comment