தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் (76) கடந்த வியாழனன்று உடல்நலக்குறைவால் காலமானார். கணீர் குரலுக்கும், அலட்டல் இல்லாத நடிப்புக்கும் சொந்தக்காரரான இவர் நூற்றைம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ராஜேஷ் வில்லியம்ஸ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மன்னார்குடியில் வில்லியம்ஸ், லில்லி கிரேஸ் தம்பதியருக்குப் பிறந்தார். பள்ளிக்காலம் திண்டுக்கல் வடமதுரையிலும் காரைக்குடியிலும் கழிந்தது. சென்னை பச்சையப்பா கல்லூரியில் பட்டப்படிப்புக்குச் சேர்ந்தார். ஆனால் படிப்பை முடிப்பதற்குள் பட வாய்ப்புகள் வரவே அதை விட வேண்டியதாயிற்று. “என்னுடைய ஜாதகத்தின் படி கடைசி வரை பட்டம் பெற இயலாத நிலைதான் என்பது எனக்குத் தெரியும். அதை மாற்ற முடியுமா” என்று ஒருமுறை கேட்டார் ராஜேஷ்.
தமிழ் மலையாளம், தெலுங்கு எனப் பல படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த இவர், 1974 இல் பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை மூலம் அறிமுகமாக வேண்டியவர். கடைசி நேரத்தில் கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவர் நடிக்க வேண்டிய வேடத்தில் கமல்ஹாசன் நடித்தார். அதில் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆட்பட்டாலும் எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்று தொடர்ந்து வாய்ப்பு தேடத் தொடங்கினார். 1979 இல் கன்னிப்பருவத்திலே படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பாக்கியராஜ் வடிவுக்கரசி நடித்த அந்தப்படம் அவருக்குப் பெரிய பெயரைத் தேடிக் கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு நடித்த படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. தொடர்ந்து தோல்விகள். இயக்குநர் மகேந்திரன் இவரது அத்தை மகன். அவர் மூலம் துணை இயக்குநராக முயற்சி செய்தார். அதுவும் சரியாக வரவில்லை.
பாலச்சந்தரால் அறிமுகமாகவேண்டிய இவருக்குப் பத்து ஆண்டுகள் கழிந்து வந்த வாய்ப்புதான் அச்சமில்லை அச்சமில்லை. சரிதாவும் இவரும் இணைந்து நடித்த அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெற்றி. ஆனால் வாய்ப்புகள் சரியாக வரவில்லை. என்னவென்று தெரியாத நிலையில்தான் ஒரு ஜோசியரைச் சந்தித்தார். இவருக்கும் ஜோசியத்திற்கும் உண்டான பரிச்சயம் இவரது பதினோராவது வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இவரது அத்தையைப் பற்றி ஒரு ஜோசியர் எழுதிக்கொடுத்த பத்து விஷயங்களும் அப்படியே நடந்தன. இதில் ஏதோ இருக்கிறது என்று அவரை உறுதியாக நம்ப வைத்தது அதுதான். இது போன்ற விஷயங்களுக்குத்தான் திரையுலகில் பஞ்சமே இல்லையே. வாய்ப்பை அறிய ஜாதகம் பார்த்தவருக்கு அந்த ஜோதிடத்தின் மேல் அபாரமான நம்பிக்கையும் காதலும் வந்து சேர்ந்தது. இதைத் தொடர்ந்து ஜோசியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஏராளமான நூல்கள், ஆராய்ச்சிகள் செய்தார். ஓலைச்சுவடி படித்தல், பிரசன்னம் பார்த்தல், வாஸ்து என அனைத்து விஷயங்களையும் அறிந்தார்.















Add Comment