கர்நாடகத்தின் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த `கர்நாடக உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024`-க்குக் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் மேலாண்மை தொடர்பான வேலைகளில் ஐம்பது சதவீதம், மேலாண்மை அல்லாத வேலைகளில் எழுபது சதவீதம், `சி` மற்றும் `டி` பிரிவு வேலைகளில் நூறு சதவீதமும் கன்னடர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்தச் சட்டத்தின்படி, கர்நாடகத்தில் பதினைந்து ஆண்டுகளாக வசிக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், கன்னடம் எழுத, பேசத் தெரிந்தவர்கள், ஒருங்கிணைந்த அமைப்பால் நடத்தப்படும் கன்னட மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உள்ளூர் வாசிகளாகக் கருதப்படுவார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் மொழிப்பாடமாகக் கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வைத் தனியாக எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டவிதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ரூபாய் பத்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பன கூடுதல் விதிகள்.
இந்தச் சட்டம் ‘பிற்போக்கானது’, ‘சட்டவிரோதமானது’, ‘பாசிசத்தன்மை கொண்டது’ என்று முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும் விமர்சித்தனர்.
மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் (Chairman of Manipal Global Education Services) நிறுவனத்தின் தலைவர், மோகன்தாஸ் பாய், பயோகான் (Biocon) நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, அசோசெம் (ASSOCHAM) நிறுவனத்தின் கர்நாடகப் பிரிவு இணைத் தலைவர் ஆர்.கே.மிஸ்ரா, ஃபோன்பே (PhonePe) தலைமைச் செயல் அதிகாரி சமீர் நிகாம், முதலியோர் தங்களது கடுமையான எதிர்ப்பை, இந்த மசோதாவுக்கு எதிராக தெரிவித்தனர்.
இவர்களில் சமீர் நிகாமுக்கு எதிரான வலுவான போராட்டங்களை அன்றே கன்னட அமைப்புகள் தொடங்கின. அவர் தன் நிலையிலிருந்து பின்வாங்கி, தன் கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், வருந்துவதாகவும் சொன்னார்.
காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் இந்த மசோதாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சசிதரூர், ‘இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கே எதிரானது, விவேகமற்றது’ என்று விமர்சித்ததுடன், ‘இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால், கர்நாடகாவிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு நிறுவனங்கள் இடம்பெயர்ந்துவிடும்’ என்றும் எச்சரித்தார்.
Add Comment