பள்ளி மாணவர்கள் விளையாட்டுக்களைத் தவிர்த்து வீட்டுப்பாடத்தைச் செய்ய வேண்டும். மகாகவி பாரதி “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று சொன்ன அதே அறிவுரைதானே? குறிப்பிட்டு இதை இங்கே சொல்ல என்ன காரணம்? இதை பிபிசி நேர்காணலின் போது சொன்னது உலகளவில் முன்னணியில் இருக்கும் மின்-விளையாட்டு நிறுவனமான ரோப்லாக்ஸ்ஸின் (Roblox) தலைவர் டேவிட் பஸ்ஸுக்கி. ரோப்லாக்ஸ் என்றால் என்ன, அதன் தொடக்கம், அதன் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வோம்.
இன்று இருக்கும் பல லட்சம் வீடியோ கேம்ஸ்களில் இருந்து ரோப்லாக்ஸ் வித்தியாசமானது. இது விளையாட்டுகளை உருவாக்கும் கூடம். உதாரணமாக யு-ட்யூப்பை எடுத்துக் கொள்ளலாம், யு-ட்யூப்பில் மற்றவர்களின் காணொளிகளை நாம் பார்க்கலாம், நாமாகப் புதிதாக ஒன்றை ஒளிப்பதிவு செய்து பதிவேற்றமும் செய்யலாம். அதாவது தயாரிப்பு, நுகர்தல் என இரண்டையும் செய்யும் வசதியை யு-ட்யூப் வழங்குகிறது. இதையே மின்-விளையாட்டுகளுக்குச் செய்யும் மேடை ரோப்லாக்ஸ்.
2024 இறுதியில் இருபது கோடிக்கும் அதிகமானோர் மாதம்தோறும் ரோப்லாக்ஸ்ஸில் விளையாடுகிறார்கள். இதில் எட்டுக் கோடி பயனர்கள் பதின்மூன்று வயதுக்கு உட்பட்டவர்கள். அடுத்த எட்டுக் கோடி பயனர்கள் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். அதாவது சுமார் 80 சதவிகிதப் பயனர்கள் சிறுவர்கள். அமெரிக்காவில் இருக்கும் சிறுவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ரோப்லாக்ஸ் பயனர்கள் என்றால் நம்புவீர்களா? இந்தளவு எண்ணிக்கையில் சிறுவர்களைக் கொண்ட செயலி வேறு எதுவுமேயில்லை. மிகப் பிரபலமான ஃபோர்ட்நைட் விளையாட்டின் பயனர்களில் கூட, சிறுவர் சதவிகிதம் அறுபது தான். சிறுவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் பாதுகாப்பை உணர்ந்து தாங்கள் செயல்படுவதாகவும், ஒருவருக்கு கூட பாதிப்பு வரக் கூடாது என்பதில் தாங்கள் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார் டேவிட்.
Add Comment