ரசம் வைக்க முடிவு செய்கிறீர்கள். அட, தாளிக்கக் கருவேப்பிலை இல்லையா? கவலை வேண்டாம். ஸெப்டோவில் ஆர்டர் செய்து விட்டு, புளியை ஊற வைப்பதில் தொடங்கி ரசத்திற்குத் தேவையானவற்றைக் கூட்டிச் சேருங்கள். நீங்கள் தாளிப்புக்குத் தயாரானவுடன் கருவேப்பிலையும் வந்து சேர்ந்துவிடும். எட்டு அல்லது பத்து நிமிடங்களில் ஆன்லைன் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படும் காலமிது. பால் முதல் போதைப்பொருள் வரை நிலைமை இதுதான். இதற்கென ரஷ்யாவில் அமேசான் தளம் போலவே சட்டவிரோத போதை விற்பனை வலைத்தளங்கள் செயல்படுகின்றன.
போதைப் பொருளை வாங்க, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. பணம் மட்டும் போதும் ஆர்டர் செய்வதற்கு. பணம் என்றில்லை, பிட்காயின் வரை நீங்கள் எதில் வர்த்தகம் செய்தாலும் சரி. அனைத்து வசதிகளும் உண்டு. தக்காளி, வெங்காயம் எவ்வளவு கிலோ தேவை என்று தேர்வு செய்வதைப் போலவே, எத்தனை கிராம் மஃபட்ரோன் வேண்டும் என்று இந்த வலைத்தளத்தில் தேர்ந்தெடுக்கலாம். கைப்பேசியில் பயன்படுத்த குறுஞ்செயலி வடிவமும் உண்டு. ஹெராயின், கோகெயின் போன்றவையும் இதில் கிடைத்தாலும், பிரபலமாக விற்பனையாவது மஃபட்ரோன் தான். 1, 2 அல்லது 5 கிராம் படிகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்கிவிட்டால் போதும், நாமிருக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே ஒரு முகவரி காட்டப்படும். அங்குச் சென்று பொட்டலத்தை நாமே எடுத்துக் கொள்ளலாம்.
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் டயர்களுக்குள், ஜன்னல் அல்லது கதவின் நிலைப்படி, மின்விளக்குக் கம்பம், பூங்காவிலுள்ள இருக்கை, மரப்பொந்து, தெருவோரப் புதர்கள், ட்ரான்ஸ்பார்மர் பெட்டி என நாம் அன்றாடம் புழங்கும் இடங்களில் தான் இவை ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை தேடிக் கண்டுபிடிக்க உதவி தேவைப்பட்டால், அந்த செயலியிலேயே பொட்டலம் இருக்குமிடம் வீடியோ மூலம் விளக்கப்படும். பொருள் கைக்கு வந்தவுடன் செயலியில் அதைத் தெரிவிக்க வேண்டும். தகுந்த பின்னூட்டம், ஸ்டார் ரேட்டிங் எல்லாம் கொடுப்பதும் தொடர் சேவைக்கு அவசியம்.
எதிர் கால உலகம் பயமுறுத்துகிறது.