தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க் நகரங்களோடு இணைக்கும். இவ்விரு நாட்டின் எல்லை நகரங்களிவை. எல்லாமே ரஷ்யாவுடையது என்றானபிறகு, இனி எல்லைகள் எதற்கு?
அங்கிருந்து கொஞ்சம் வோல்னோவாகா, ரோஸிவ்கா, மெலிட்டோபோல் நகரங்களைக் கடந்து, தெற்கு உக்ரைனிலிருக்கும் கிரீமியாவையும் இணைக்கும். ரஷ்யாவின் ரஸ்தோவில் தொடங்கி, உக்ரைனின் மெலிட்டோபோல் வழியாக கிரீமியா. இந்தியாவின் வந்தே பாரத் இரயில் போல. இன்னும் சிலகாலத்தில் விரிவடைந்து, ஸாப்ரோசேஷியா மற்றும் கெர்சோனையும் இணைத்துவிடும். ‘நொவோரஸியா இரயில்வே நிறுவனம்’ இத்திட்டத்தைச் செய்து முடிக்கும். இதற்கான தீர்மானத்தை ரஷ்ய அரசு நிறைவேற்றி விட்டது. கட்டுமானப் பணிகளும் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
கிரீமியா பாலத்தை மட்டுமே இனி நம்பியிருக்க வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் தாக்கப்படுகிறது இப்பாலம். அடிக்கடி போக்குவரத்துத் தடைபடுகிறது. இனி ரஷ்யாவின் இராணுவத்தையும், தளவாடங்களையும் தடையின்றி இந்த இரயில்கள் உக்ரைனில் கொண்டு சேர்க்கும். வெகுதூரப் பயணத்திற்கு நல்லதொரு மாற்றுப்பாதை. பாதுகாப்பானதும்கூட. விமானங்கள் எந்நேரமும் சுட்டு வீழ்த்தப்படக் கூடியவை. குளிர்காலத்திலும், பாக்மூத் படைகளின் தேவைகள் அனைத்தும் இரயில்கள் மூலமே கொண்டு சேர்க்கப்பட்டதல்லவா?
Add Comment