29 ஜூன் 2023 இங்கிலாந்தின் அப்பீல் கோர்ட் பிரித்தானிய அரசின் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் கொள்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. பிரதமர் ரிஷி சுனக், ‘இத்தீர்ப்புத் தவறானது. ருவாண்டா ஒரு பாதுகாப்பான நாடு. நாம் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போவோம்’ என்று அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதைத் தெளிவாகக் கூறினார். இந்தக் கொள்கை பற்றிய வழக்கின் முதலாவது தீர்ப்பினை அரசு சார்பாக உச்ச நீதிமன்றம் 2022 டிசம்பர் மாதம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இப்போதைக்கு அரசுக்குச் சார்பாக ஒரு நீதிமன்றத் தீர்ப்பு. அரசுக்கு எதிராக ஒரு நீதிமன்றத் தீர்ப்பு எனும் சமநிலையில் உள்ளது இந்த வழக்கு. சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வழக்கு முழுமையாக முடிவிற்கு வரும்வரை யாரும் ருவாண்டா போகப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
இனி, பிரித்தானிய அரசின் ருவாண்டா நாட்டுக்கனுப்பும் கொள்கை என்னவென்று பார்ப்போம். 2022 ஏப்ரல் மாதம் போரிஸ் ஜோன்சன் பிரதமராகவும் பிரித்தி பட்டேல் உள்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இக்கொள்கை அறிவிக்கப்பட்டது. முதலில் இது ஒரு ஐந்தாண்டு நடைமுறைச் சோதனை முயற்சியாகவே அறிவிக்கப்பட்டது. அதுவும் ஆரம்பத்தில் தனியாக வரும் ஆண்களையே சோதனைக் காலத்தில் அனுப்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி இங்கிலாந்தின் சட்டத்திற்கு புறம்பான முறைகளில் வந்து அகதியாகத் தஞ்சம் கோருவோர் ருவாண்டா நாட்டிற்கு அரசின் செலவில் அனுப்பப் படுவார்கள். அந்நாட்டில் அவர்கள் அகதியாகத் தஞ்சம் கோரலாம். அல்லது வேறு வழிகளில் பாதுகாப்பாக ருவாண்டாவில் இருக்க முயற்சிக்கலாம். அல்லது வேறு மூன்றாவது நாட்டில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கலாம். அதாவது இங்கிலாந்தில் அவர்களுக்கு இடமில்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறும் நடைமுறைச் செயல் இது.
Add Comment