Home » சலம் – 5
சலம் நாள்தோறும்

சலம் – 5

5. கருஞ்சிவப்புக் கல்

பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் – நெடுந்தொலைவு என்பதற்கு அப்பால் ஒன்றுமே தோன்றவில்லை. இந்நாள்களில் ஒன்றை மட்டும்தான் என்னால் சரியாகக் கவனிக்க முடிந்தது. சர்சுதியின் அடர்த்தி. உருத்திர மலையின் மேற்குச் சரிவில் அது புறப்படும் இடத்தில் ஒரு சிறிய ஓடையைப் போலத்தான் காட்சியளித்தது. கோலைப் பற்றிக்கொண்டு மலை ஏறுபவர்களைப் போல இதன் வாலைப் பிடித்துக்கொண்டு நடந்துவிடலாம் என்று முடிவு செய்துகொண்டு கிளம்பினேன். ஆனால் புறப்பட்ட இரண்டு நாழிகைகளிலேயே எனக்குப் பாதையற்றுப் போய்விட்டது. தன் வழியைக் கண்டடைய நதிகள் வைத்திருக்கும் சூக்குமம் மனிதனுக்குப் புரிந்துவிட்டால் எவ்வளவோ மகத்தான செயல்களைப் புரிய வாய்ப்பிருக்கும். அது முடியாததால்தான் நதி, நதியாகவும் மனிதன், மனிதனாகவும் இருக்கிறான். உண்மையில் அது எனக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. ஏழு பிறப்புகளில் ஏதேனும் ஒன்றில் நதியாக இருந்திருக்கலாம். ஆனால், வருந்திப் பயனில்லை. நதிக்கு ஒரு பிறப்புதான். அப்படிச் சொல்வதுமே பிழை. இறப்பில்லாத ஒன்றனுக்குப் பிறப்பென்று ஏதும் இருக்குமா? அது இருப்பது.

எப்படியோ அதன் ஒலியை வைத்து திசையைக் கணித்துத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல மீண்டும் பாதையைப் பிடித்தேன். அதன்பிறகு ஆறேழு நாள்கள் பெரிய சிக்கலில்லாமல் நதியோரமாகவே நடக்க முடிந்தது. பிறகு மீண்டும் அடர்ந்த கானகங்களுக்குள் அது புகுந்து ஓடத் தொடங்கியபோது நான் சுற்றிக்கொண்டு மீண்டு வந்து தடத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது.

புறப்படும்போது சூரபதியிடம், சர்சுதி எவ்வளவு தொலைவுக்குப் போகும் என்று கேட்டேன். அவருக்கு அது தெரிந்திருக்கவில்லை. எங்கள் இனத்தார் வசிக்கும் எல்லைக்குள் முன்னர் சலக் கணியர் ஒருவர் இருந்தார். அவரிடம் கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கல் உண்டு. நல்ல உருளையாக, வழுவழுவென்றிருக்கும். எப்போதும் அதை அரையில் முடிந்து வைத்திருப்பார். அவரை ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒன்றரை நீர்க்காதம் சென்றால், ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தபடி அந்த கருஞ்சிவப்புக் கல்லை எடுத்து நதியில் போடுவார். அவர் சொல்லும் வரை ஓடம் அங்கேயே நிற்க வேண்டும். அங்குலம்கூட நகரக் கூடாது. பல நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் கருஞ்சிவப்புக் கல் மெல்ல எழுந்து மேலே வரும்.

அதுவல்ல அதிசயம். அப்படி நீரில் போட்டு மேலே வந்த கல், தீயிலிட்ட அத்திக் கட்டையைப் போலச் சுடும். சலக் கணியர் அதை இரண்டு உள்ளங்கைகளுக்கும் மாற்றி மாற்றி ‘ஃபூ.. ஃபூ’ என்று ஊதிச் சற்று சூட்டைத் தணித்துக் காதில் வைத்துத் தீவிரமாக எதையோ கவனிப்பார். பிறகு ‘இந்த நதி நாநூறு காதம் போகும், இது எழுநூறு காதம் தாண்டும், இது நாற்பது காதத்தில் காய்ந்துவிடும்’ என்று சொல்லிவிட்டுக் கல்லை மீண்டும் இடுப்பில் முடிந்துகொண்டுவிடுவார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!