12. மின்மினி
அவன் வயதைக் கணிக்க முடியவில்லை. ஒரு கணம் என் தகப்பனின் வயதுதான் இருக்கும் என்று தோன்றியது. உடனே அவன் இன்னும் மூத்தவனாக இருப்பான் என்றும் தோன்றியது. சட்டென்று இரண்டுமில்லை; அவன் வலு குன்றாத ஒரு வயோதிகன் மட்டுமே என்று நினைத்தேன். ஏழடி உயரம் இருந்தான். ஓடத்தின் துடுப்பை நிமிர்த்தி வைத்தாற்போலிருந்தது அவன் நின்றிருந்த தோற்றம். அவனது நிறம் என்னைத் திகைக்கச் செய்தது. அது வெண்மையல்ல. தாமிர நிறம் அல்ல. முழுச் சிவப்புமல்ல. இம்மூன்றின் கலவை என்று சொல்லவும் சற்றுத் தயக்கமாக இருந்தது. மூன்றிலிருந்தும் சிறிது பெயர்த்தெடுத்து அவனுக்கென்றே உருவாக்கிய தனியொரு நிறத்தினால் வசீகரிக்கக்கூடியவனாக இருந்தான். நானும் என் தகப்பனும் தாயும் சேற்றின் நிறம் கொண்டவர்கள். தவிர இயல்பாகவே உடல் சற்று அகன்றிருக்கும். அதனாலேயே எங்கள் உச்சந்தலையில் கைவைத்து இரண்டு கண்டல் அழுத்தி வைத்தாற்போலத் தெரிவோம். அவனோ, மிக நீண்டதொரு சஞ்சலியைக் கடைந்து நிறுத்தினாற்போலக் காட்சியளித்தான்.
ஒரு கண் மட்டும் மூடியிருந்த அவனது தோற்றத்தைக் கண்டதும் முதலில் எனக்கு அச்சம் எழுந்தது. அவன் தனது சடாமுடியை சிரத்தின் உச்சிக்குக் கொண்டு குவித்து முடிந்திருந்தான். முகம் நிறைத்த தாடி செம்பழுப்பு நிறத்தில் இருந்தது. அது அவன் மார்புவரை நீண்டிருந்தது. இடுப்பில், மரஉரியும் நெஞ்சின் குறுக்கே எருதுத் தோலாலான அகன்ற பட்டையொன்றும் அணிந்திருந்தான். அவன் கையில் ஒரு கமண்டலப் பாத்திரம் இருந்தது.
அந்தப் பிராயத்தில் எனக்கு ஒரு மனிதனைக் கண்டதும் அவன் பிராமணனா, சத்திரியனா, வேறு குலத்தவனா என்றெல்லாம் கணிக்கத் தெரிந்திருக்கவில்லை. மனிதர்கள் எனக்கு இரண்டு விதமாக மட்டுமே அப்போது அறிமுகமாகியிருந்தார்கள். துணிந்து அருகே சென்று பேசக்கூடியவர்கள் ஓரினம். நாற்பத்தெட்டு காலடித் தொலைவில் மண்டியிட்டு வணங்கிவிட்டு விலகி நிற்க வேண்டியவர்கள் இன்னோர் இனம். இரு தரப்பினரையுமே தோற்றத்தை வைத்து அடையாளம் காணப் பழகியிருந்தேன்.
ஆனால் என் எதிரில் நின்றிருந்தவன் எந்த வகைக்கும் அடங்காதவனாக இருந்தான். திறந்திருந்த அவனது வலது கண் ஒரு சிறிய பனிக்கட்டியைப் போல உருண்டுகொண்டிருந்தது. அவன் என்னைத்தான் பார்க்கிறானா, என்னைச் சுற்றிப் பார்க்கிறானா என்றே கணிக்க முடியாதிருந்தது.
Add Comment