15. சூத்திர முனி
யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமக்கெதிராக ஒரு குரலை வாழ்நாளில் அவர்கள் கேட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது. தவிர, ஓர் எறும்பு எழுந்து நின்று பேசுவது போல நான் ஆவேசப்பட்டது அவர்களுக்கு வினோதமாகவும் இருந்திருக்க வேண்டும். சில விநாடிகளுக்கு அவர்கள் யாரும் பேசவேயில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் என் தகப்பன் பதறிப் போனான்.
‘மகனே, இது மகாபாவம். மண்டியிட்டு மன்னிப்புக் கேள்’ என்று சொன்னான்.
‘எதற்கு அப்பா?’
‘பதில் பேசாதே. சொன்னதைச் செய்’ என்று அவன் குரலெடுத்துக் கத்தினான். எங்கே நான் இன்னும் தாமதம் செய்துவிடுவேனோ என்று அஞ்சி நடுங்கிச் சட்டென்று ஓரடி முன்னால் சென்று அவர்கள்முன் மண்டியிட்டான்.
‘பிரம்மச்சாரிகளே, சிறுவன் தெரியாமல் செய்த பிழையை மன்னியுங்கள். நீங்கள் குருகுலத்துக்குச் செல்லுங்கள். நான் இந்த மானை எடுத்து வந்துவிடுகிறேன்’ என்று சொன்னான்.
எனக்கு இது மிகவும் வினோதமாக இருந்தது. அவர்களைவிட என் தகப்பன் பலசாலி. அவர்களைவிட என் தகப்பன் வயதில் மூத்தவன். அவர்களினும் ஆற்றல் மிக்கவன். தோள்வலி படைத்தவன். அனைத்துக்கும் மேலாக அந்த மானின் பின்தொடையில் சொருகியிருந்த அம்பு அவனுடையது. ‘எங்களுக்குத் தந்துவிடு’ என்று அவர்கள் சொல்லியிருந்தாலும் எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்திருக்காது என்று நினைக்கிறேன். என் தகப்பன் வேட்டையாடியதே அவர்களுக்காகத்தான் என்பதைப் போல உத்தரவிட்டதைத்தான் தாங்க முடியவில்லை.
Add Comment