17. ஒற்றைப் புல்
நான் பிராயங்களை அறியாதவன். மழலைப் பருவத்தையும் வளரும் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் வயோதிகத்தையும் என்றுமே உணர முடியாதவன். அவற்றின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் அறிய ஒண்ணாதவன். தாயும் தகப்பனுமின்றித் தோன்றியவன் என்பதால் பாசம் என்ற அடிப்படை மானுட உணர்ச்சியின் ருசியை அறியமாட்டேன். அன்பு, நட்பு, காதல், புன்னகை, மகிழ்ச்சி, பரவசம், துயரம், கண்ணீர் என்று எனக்கு ஏதுமில்லை. ஆனால் நான் கல் அல்ல. மண்ணல்ல. தருவென்றோ, விலங்கென்றோ வகைப்படுத்தப் பார்த்தாலும் தோற்றுத்தான் போவீர்கள். வித்திட்டு விளைந்த ஒவ்வோர் உயிருக்கும் அதனதன் அளவில் உணர்ச்சியென்ற ஒன்றிருக்கும். கந்தர்வர்களையும் தேவர்களையும் வகைப்படுத்துவது போலக்கூட என்னைச் செய்ய இயலாது. தோற்றத்தில் நான் மனிதன். இனக்குழுவில் ஆரியன். சமூக அடுக்கில் பிராமணன். தவம் செய்ததால் ரிஷி. உயிர்வளி செலுத்தப்பட்டு உலவிக்கொண்டிருக்கும் ஓர் அணு.
என் ஏழடி உயரம் குத்சனுக்கு எப்போதும் வியப்பைத் தருவதை என்னால் உணர முடிந்தது. அதைத் தவிர வியப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை என்று நினைக்கும் அவனது பால்யத்தைத்தான் பிராயங்களைக் குறித்த என் சிந்தனையின் தொடக்கப் புள்ளியாகக் கொண்டேன். யோசித்துப் பார்த்தால் அவன் நினைப்பது சரி. ஏழடி உயரத்தைத் தவிர வேறென்ன உள்ளது என்னிடம்? ஆம். மந்திரங்கள். எங்கிருந்து அவை என்னை வந்தடைகின்றன என்று எனக்குத் தெரியாது. அவற்றை உருவாக்கி அனுப்புவது எதுவென்று தெரியாது. அவை உருவாக்கப்படுவதுதானா என்றும் தெரியாது. என்றுமிருக்கும் ஒன்று என் வழியாக நிலத்தை வந்தடைகிறது என்பதிலும் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதோ, என் கண்முன்னால் ஒரு சூத்திரச் சிறுவனை அது தனது கருவியாக்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் வரலாம். இனியும் தொடரலாம். என்றென்றும் இருக்கவிருக்கும் ஒன்றன் ஏதோ ஒரு கண்ணியில் என் ரேகையைப் பதித்து வைக்க அருளப்பட்டிருக்கிறேன் என்பதற்கு அப்பால் ஒன்றுமில்லை.
எண்ணிப்பார்த்தால் அவனுமே அப்படித்தான் இருக்கிறான். அவன் மனத்தைப் படிக்க முனைகிற சந்தர்ப்பங்களிலெல்லாம் அது கழுவிக் கவிழ்க்கப்பட்ட மண்பாண்டத்தினைப் போலவே தோற்றமளிக்கிறது. அன்றாடம் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்துவிடுகிறான். பசுக்களுக்குத் தீவனம் வைக்கிறான். அவன் தாய்க்கு உதவியாகக் குடிசையின் வாசலில் உதிர்ந்து கிடக்கும் இலைகளையும் சருகுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்கிறான். கருமன் பசுக்களின் சீரத்தைக் கறந்து முடித்ததும் கன்றுகளை இவன் அதனதன் தாய்ப்பசுவினருகே கொண்டு சேர்க்கிறான். கோமியத்தை அள்ளி எடுத்துப் பிரம்புக் கூடையில் சேமிக்கிறான். பிறகு தன் தந்தையுடன் ஓடைக்குச் சென்று நீந்திக் குளிக்கிறான். மரங்களில் ஏறிக் கனிகளைக் கொய்து முடிந்துகொண்டு வருகிறான். இவற்றில் எது ஒன்றைச் செய்யும்போதும் அவன் மனத்தில் வேறெந்த நினைவும் இருப்பதில்லை. அதை நான் துப்புரவாக ஆராய்ந்து பார்த்துவிட்டேன்.
Add Comment