20. கன்னுலாக்கள்
நான் கிராத குலத்தைச் சேர்ந்த சாரசஞ்சாரன். ஆதிசிவக் குன்றில் சர்சுதி உற்பத்தியாகும் இடத்துக்கு இருபது காதங்களுக்கு அப்பால் கின்னர பூமியில் உள்ள முஞ்சவத்திலிருந்து வருகிறேன். நிகரில்லாப் பெருமன்னன் சம்பரனின் ஆயிரம் கற்கோட்டைகளுள் ஒன்றன் உறுப்பெனத் திகழ்ந்த தெய்வீகக் கல்லின்மீது அமர்ந்து ஆட்சி புரியும் ராஜன் எங்களைப் பரிபாலனம் செய்கிறான். அவனது ஓர் உத்தரவினைச் சிரத்திலேந்திக் கிளம்பியவன் நான். புறப்பட்டு நெடுநாள்களாகிவிட்டன. கடந்த தொலைவும் கணக்கிலில்லாமல் போய்விட்டது. ஒரு பிராமணனைக் கொலை செய்யச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. அதை மறக்க மாட்டேன். ஆனால் புறப்பட்டு வந்த நோக்கத்தைப் பாதியில் கைவிட்டுவிட்டு எதற்காக அந்த நிர்வாண முனியுடன் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை. இது என் வழக்கத்தில் இல்லாதது. விழைவு மீறியது. ஆயினும் இதனை என்னால் தவிர்க்க இயலவில்லை. எல்லாம் வினோதமாக இருக்கிறது.
அவனுக்குத் தீய நோக்கம் ஏதுமில்லை. அது எனக்குத் தெரிந்துவிட்டது. அவனிடம் சில சக்திகள் உள்ளன. அதையும் பார்த்துவிட்டேன். அவன் எனக்கு உதவுவதாகச் சொன்னதுதான் பொருந்தாதிருந்தது. இத்தனைக்கும் நான் அவனுக்குக் கன்னுலாவைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தேன். எனக்கு இளையவளாகப் பிறந்து தெய்வமானவள். அவளால் ஆகாத ஒன்றில்லை என்று எங்கள் கிராமத்தில் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் எப்போது அவளிடம் அந்த பிராமணனைப் பற்றிச் சொன்னேனோ, அக்கணத்தில் அவள் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக்கொண்டுவிட்டாள். தெய்வமான ஒருத்தியால் செய்ய முடியாத உதவியை முனியானாலும் மனிதனாக வாழும் ஒருவன் செய்வான் என்று எத்தனை விதமாக மாற்றிச் சிந்தித்தாலும் எனக்குத் தோன்றவில்லை. இதனை நான் அவனிடம் வெளிப்படையாகவே சொன்னதற்கு அவன் சிரித்தான்.
‘மூட சாரனே! முனியெனும் தரத்திலிருந்து தலைகுப்புற விழுந்துவிட்டவன் நான். ஆனால் ஒரு சிரஞ்சீவியைச் சாகச் சபித்தவன். என் சாபம் சாகாதவரை என்னால் உனக்கு நிச்சயமாக உதவி செய்ய முடியும்.’
Add Comment