21. தரிசனம்
அந்தக் கிராத குலத்துச் சாரனிடம் ஒரு சிக்கல் உள்ளது. ஆரியர்களின் நம்பிக்கைகள் சார்ந்தும் தேவர்களின் துணையுடன் ரிஷிகளாலும் முனிகளாலும் நிகழ்த்தப்படும் அற்புதங்கள் சார்ந்தும் அவனுக்குள்ள இகழ்ச்சி மனப்பான்மையைச் சொல்கிறேன். மயிர்க்கூச்செரிய வைக்கும் தருணமொன்றை நான் அவனிடம் விவரித்தேன். எனது தீரா வலியின் மையத்தைத் தொட்டுக்காட்டவல்ல தருணம். அவன் அதை ஒற்றைச் சொற்றொடரில் தன் நினைவில் குறித்துக்கொண்டு கடந்துவிட்டான். சிறிதளவு திகைப்பைக் கூட அவன் அடையவில்லை என்பது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. வேறு வழியின்றி அவனது நினைவில் என் சொற்களைக் கொண்டு அந்தத் தருணத்தை நான் விரித்தெழுதத் தொடங்கினேன். இது முக்கியமில்லை என்றால் வேறு எது?
அப்போது ஒரு மழைக்காலம் முடிவடைந்திருந்தது. விளைநிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் நிரம்பியிருந்த நீர் வடிந்து மண் தெரியத் தொடங்கியிருந்த நேரம். நதியோர வசிப்பிடத்தை விட்டு மேடான பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து சென்றிருந்த மக்கள் தத்தமது கால்நடைகளுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்கள். விப்ரதிக் கணவாயைக் கடக்கும்போது பசுக்களை நோய் தாக்கியது. பத்திருபதாக, ஐம்பது நூறாக அவை உரத்த குரலில் அபயம் கேட்டுக் கிடைக்காமல் மடிந்து விழுந்துகொண்டே இருந்ததைக் கண்டு கலங்கிப் போனார்கள். அவர்கள் அறிந்த வைத்தியங்களைச் செய்து பார்த்தும் பலனில்லாதிருந்தது. பசுக்கள் இறந்து விழுவது குறையவேயில்லை. அவற்றுக்கு எதை உண்ணக் கொடுப்பது, எதைத் தவிர்ப்பது என்று புரியாமல் தவித்தார்கள். ஊர் சென்று சேர்வதற்குள் ஒரு பசுவும் மீதமின்றி இறந்துவிடப் போகிறது என்கிற அச்சம் பிடித்துக்கொண்டது.
அவர்கள் நூற்றிருபது குடும்பத்தார். எண்பது பிராயத்தைக் கடந்த மூப்பர்களிலிருந்து நிறைந்த பட்சத்தில் பிறந்த நான்கு சிசுக்கள் ஈறாகச் சுமார் அறுநூறு பேர் இருந்தார்கள். மூவாயிரம் பசுக்களும் இரண்டாயிரம் செம்மறி ஆடுகளும் அவர்களிடம் இருந்தன. நோய்த் தொற்று பரவத் தொடங்கி, பசுக்கள் இறக்க ஆரம்பித்த பின்னர் தலை எண்ணிப் பார்த்ததில் இரண்டாயிரத்து அறுநூறு பசுக்களே மீதமிருந்தன. அதிர்ஷ்டவசமாக ஆடுகள் இன்னும் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகாதிருந்தன. ஆனால் எப்போது வேண்டுமானாலும் அதுவும் நடக்கலாம்.
இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என்று கூடிப் பேசியவர்கள், அப்போது கடந்திருந்த இடத்திலேயே கூடாரம் அமைத்துத் தங்கிக்கொண்டு, தமக்குள் ஒன்பது பேரைத் தேர்ந்தெடுத்து ரிஷி அதர்வனைச் சந்தித்து விவரம் சொல்ல அனுப்பி வைத்தார்கள்.
Add Comment