93. ஒடுங்குமிடம்
எல்லாம் எல்லோருக்கும் புதிதாக இருந்தது. விபரீதமாக ஏதேனும் நடக்குமோவென்று எல்லோரும் நினைத்தார்கள். வித்ருவின் பிராமணர்கள் வேள்விகள் செய்ய ஆயத்தமானார்கள். சத்ரியர்களும் பணிகளும் பிறரும் காண்கின்ற அனைவரையும் அழைத்து அழைத்து தானங்கள் செய்தார்கள். பிழைபட்ட நிமித்தங்கள் அனைத்தும் பைசாசங்களின் செயலாக இருக்குமென்று அஞ்சி சூத்திரர்கள் தத்தமது புஜங்களில் அடுக்கடுக்காகத் தாயத்துகள் அணிந்துகொண்டு நடமாடத் தொடங்கினார்கள். புரத்தினுள் வசித்த பெண்கள் தமது காவல் தேவதைக்குப் படையலிட்டு வீட்டு வாசல்களில் கோமியத்தைக் குவித்து வைத்தார்கள்.
அது சரத் காலமல்ல. சிசிரம் முடிந்து வசந்த ருதுவின் தொடக்கத்தில் திடீரென்று வித்ருவில் உள்ள தருக்களெல்லாம் இலைகளை உதிர்க்கத் தொடங்கியதுதான் அனைத்துக்கும் ஆரம்பமாக இருந்தது. ரிஷிகள் கணித்து வைத்திருந்ததற்கு மாறாக சூர்யோதயம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் நிகழத் தொடங்கியிருந்தது. திடீரென்று சர்சுதியின் நீர்ப்பெருக்கு குறைந்து, அது ஓர் ஓடையைப் போலச் செல்லத் தொடங்கியதைக் கண்டு வித்ருவின் மக்கள் திகைத்துப் போனார்கள். ஓடி ஓடிச் சென்று கரையோரம் நின்று அவர்கள் கவலையுடன் பார்த்தபோதெல்லாம் மச்சங்கள் இறந்து கரை ஒதுங்கின. இது மிக நிச்சயமாக நல்ல நிமித்தமில்லை என்று பிராமணர்கள் சொன்னார்கள்.
அன்றைக்கு அதிகாலை அதர்வனின் ஆசிரமத்து கோசாலையில் இருந்த மூன்று பசுக்கள் திடீரென்று இறந்துவிட்டதாக அங்கிருந்து ஒருவன் ஓடி வந்து தகவல் சொன்னான். நோய் கண்ட பசு இறப்பது இயற்கை. ஆனால் முதல் நாள் வரை ஆரோக்கியமாக இருந்த பசுக்கள் விடியும் நேரம் ஓலமிட்டு இறந்து விழுந்தது எப்படி யோசித்தாலும் அச்சமூட்டுவதாகவே உள்ளதாக அதர்வனின் சீடர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
‘குருநாதருக்கு இதனைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் தியானத்தில் இருக்கிறார். எப்படி அவரைக் கலைப்பதென்று தெரியவில்லை’ என்று அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். சட்டென்று அவனது குடிலின் கதவைத் திறந்து,
‘ரிஷியே, கண் விழித்துப் பார். உன் சீடர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்று குரல் கொடுத்தேன்.
Add Comment