94. வேள்வித் தீ
அன்றைக்கு அதிகாலையிலேயே அதர்வனின் சீடர்கள் தமது அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு, ஆசிரம வளாகத்தை சுத்தம் செய்து, அலங்கரிக்கத் தொடங்கினார்கள். வனத்திலிருந்து பறித்து வந்த புஷ்பங்களைக் குடில்களின் முகப்பில் கொத்துக் கொத்தாகச் சொருகி வைத்தார்கள். அதர்வனின் குடிலுக்கு வெளியே இருக்கும் யக்ஞ குண்டத்தை சுத்தம் செய்து கோலமிட்டு சமித்துக் கட்டுகளைக் கொண்டு அருகே வைத்தார்கள். ஆசிரமத்தின் வாயிலருகே தோரணம் கட்டினார்கள். இரண்டு பெரிய தாம்பாளங்களில் மணமக்களுக்குரிய ஆடை ஆபரணங்களைக் கொண்டு வந்து வைத்தார்கள். பத்ம பத்ரங்களில் நெய் கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஒன்றில் அட்சதை இருந்தது.
அதர்வன் குறித்துச் சொல்லியிருந்த நேரத்துக்கு ஒரு நாழிகை முன்னதாக அந்த சத்திரியத் தாய் தகப்பன் தமது பெண்ணை அழைத்து வந்துவிட்டிருந்தனர். அவர்கள் இருப்பதற்குத் தோதாக ஆசிரம வளாகத்தினுள்ளேயே புதியதொரு குடிலை முன்னதாக அமைத்து வைத்திருந்தார்கள். அவர்களை வரவேற்று உள்ளே அனுப்பிய மறு நிமிடமே அந்த பிராமணப் பையன் தனது தாய் தகப்பனுடன் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களை எங்கே இருக்கச் சொல்வார்கள் என்று நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, வளாகத்தினுள்ளே இருந்த ஒரு ரசாலத் தருவின் அடியில் போய் இருக்கச் சொல்லிவிட்டார்கள்.
ஓடையில் நீராடிவிட்டு அதர்வன் ஆசிரமத்தை நோக்கி வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். சொல்லி வைத்தாற்போல, அதே நேரம் வித்ருவின் பிராமணர்கள் ஒரு கூட்டமாக ஆசிரமத்தை நோக்கி ஆவேசமாக வந்தார்கள். அதர்வனைக் கண்டதும் வணங்கக்கூடத் தோன்றாமல்,
‘ரிஷியே நீர் பெரும்பாவம் செய்கின்றீர்கள். இதை எங்களால் அனுமதிக்கவே முடியாது’ என்று சொன்னார்கள். அதர்வன் அவர்களை ஒரு பார்வை பார்த்தான். ஒன்றுமே சொல்லாமல் நேரே தனது குடிலை நோக்கிச் சென்றான்.
Add Comment