96. காணிக்கை
நடந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் நடப்பது போலத் தெரியவில்லை. இடம் பெயர்ந்துகொண்டே சென்றது. நிலக்காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஆயினும் எங்கோ ஓரிடத்தில் நிலைகொண்டிருப்பது போலத் தோன்றியது. இரவு பகல் மாற்றம் தெரிந்தது. களைப்புத் தோன்றவில்லை. கால் வலிக்கவில்லை. உறங்க வேண்டுமென்று தோன்றவில்லை. பசிக்கவில்லை. இது வினோதமாக இருந்தது. அந்த பிராமணன் எனக்குச் சில சௌகரியங்களைச் செய்து தருகிறான் என்பது புரிந்தது. அதற்காக நான் அவனுக்கு நன்றி சொன்னேன். அவன் அதற்கும் எதற்கும் பதில் சொல்லவில்லை.
என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் மனிதர்களோடு வாழ்வதற்குப் பொருத்தமானவனல்லன். மனிதர்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதும் பிராமணர்களுக்கிடையில் அவன் வாழ நேர்ந்தது ஒரு வினோதம். வித்ருவில் அவனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சொற்ப தினங்களிலேயே எனக்கு பிராமணர்களை அறவே பிடிக்காமல் போனது. இத்தனைக்கும் நான் நியாயங்களை மதிப்பவன். ஏற்கிறேனோ இல்லையோ, அனைத்துத் தரப்புகளையும் பரிசீலனை செய்யும் வழக்கம் கொண்டவன். ஆனால் அதர்வனுக்கு நியாயம் என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததில்லை. தர்மத்துக்கு அப்பால் ஒன்றுமில்லை என்பதில் அவன் திட சித்தம் கொண்டிருந்தான். நான் கேட்டேன்,
‘ரிஷியே, நீ பிராமண குலத்தில் உதித்தாய். பிராமணர்களுடனேயேதான் இத்தனை நீண்ட ஆயுள் காலத்தைக் கழித்திருக்கிறாய். அவர்களுடைய இந்தக் காழ்ப்பும் கசடுகளும் வன்மமும் விரோத உணர்ச்சியும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற பேதமும் மற்றவையும் எனக்கே இன்று பழக்கப்பட்டவையாக, சாதாரணமானவையாகத் தோன்றும்போது உனக்கு அது ஒன்றுமில்லாததாகத்தான் இருக்க வேண்டும். நீ இன்றைக்கு அவர்களை விட்டு விலகிச் செல்ல நினைப்பது மட்டும் எப்படி உன் தர்மத்தில் சேரும்?’
அவன் நெடு நேரம் இதற்கு பதிலளிக்கவில்லை. அமைதியாகவே என்னுடன் நடந்துகொண்டிருந்தான். நான் கேட்டதை நானே மறக்கவிருந்த கணத்தில் சட்டென்று என்னைப் பார்த்துச் சொன்னான்,
‘நான் ஒட்டிக்கொண்டிருக்கவும் இல்லை; விட்டு விலகவும் இல்லை சாரனே. வித்ருவில் இருந்தவரை என்ன செய்துகொண்டிருந்தேனோ அதையேதான் இப்போதும் செய்கிறேன்.’
Add Comment