100. பூரணம்
வானில் பருந்தொன்று நெடுநேரமாக வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. அதன் வட்டம் விரியும் எல்லைக்குள் வந்த தருக்களெல்லாம் சட் சட்டென்று அசைவதை நிறுத்த ஆரம்பித்தன. காற்று ஒடுங்கியது. பட்சிகள் ஒடுங்கின. பகல் தனது நிறத்தைக் குறைத்துக்கொண்டு சாம்பர் பூசிப் புலப்பட ஆரம்பித்தது. மித்ரனின் நிறம் மங்கியது. வெளியெங்கும் மெல்லிய புழுக்கம் சூழத் தொடங்கியது. நான் அண்ணாந்து பார்த்தேன். மழை மேகங்கள் இல்லை. ஆயினும் எதுவோ ஒன்று நிகழவிருப்பதன் நிமித்தமாகவே எல்லாமும் தென்பட்டன. அவன் வந்திருந்ததும் முனி அங்கே இருந்ததும் காரணமாயிருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். அதை அவனிடம் கேட்கவும் செய்தேன்.
‘ரிஷியே நான் உணரும் சூழலின் வேறுபாட்டின் காரணம் உன் வருகைதானா?’
‘இருக்க முடியாது’ என்று அவன் சொன்னான். ‘நான் பைசாசமில்லை சாரனே. அதர்வன். குத்சன் என்னைக் காண விரும்பவில்லை என்று உன்னிடம் சொன்னபடியால் அரூபமாக வந்து நிற்கிறேன். அவ்வளவுதான். அவன் இப்போதே சொன்னாலும் என் தோற்றத்தை வெளிப்படுத்திவிடுவேன்.’
அவன் குரல் வந்த திசைக்கு எதிர்ப்புறமாக முனி திரும்பி நின்றுகொண்டிருந்தான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் திரும்ப மறுத்தான்.
‘அவன் நாள் தவறாது யக்ஞம் நிகழ்த்துபவன். யோக்கியதை என்றால் என்னவென்று அவன் அறிவான். அவன் இருக்கும் திக்கு நோக்கி நான் திரும்புவதென்பது ஒரு யக்ஞத்துக்கு நிகரானதா இல்லையா என்று அவனைக் கேள். எனக்கு அதற்கு யோக்கியதை உண்டா என்று சொல்லச் சொல்’ என்று சொன்னான்.
Add Comment