பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில் அவர் எப்போதாவது உரையாடும் போது, எங்கிருந்து வருகிறாய்? என வினவுவாராம். சேலத்தில் இருந்து வருகிறேன் என்று சொன்னால், என் தம்பி ஒருத்தன் அங்கே தாதகாப்பட்டியில் இருக்கான். அவனைப்போய் பாருங்க. என்னை பாக்க இவ்ளோ தூரம் ஏன் வர்றீங்க? அவனை பாக்குறதும், என்னைப் பாக்குறதும் ஒண்ணுதான் என்பாராம். சித்தர் எதற்காக சொல்கிறார் என்பதைப் புரிந்துக்கொள்ளாமல் ஆரம்பத்தில் தடுமாறியவர்கள் , திரும்பத் திரும்ப அவர் சொன்னதினால், அவர் தரிசிக்க சொன்ன நபரைப் பார்ப்பதற்காக, சேலத்தில் தாதகாப்பட்டியை நாடிவர ஆரம்பித்தனர்.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தாதகாப்பட்டி ஏரியா. பக்தர்கள் இந்தப் பகுதிக்கு வந்து, இங்கே யாராவது சித்தர் இருக்கிறாரா? கணக்கம்பட்டி சித்தர் சொல்லிஅனுப்பினார் என்று விசாரிக்க, முதலில் யாருக்கும், எதுவும் தெரியவில்லை. பின்பு ஒருவாறு யூகித்த பொதுமக்கள், அந்த ஏரியாவில் புது திருச்சிக் கிளை ரோட்டில் ஒரு வீட்டைக் காட்டியுள்ளனர். அந்த பழைய ஓட்டுக்கட்டடத்தில், வயதான ஒருவர் வசிப்பதாகவும், அவர் யாரிடத்திலும் எதுவும் பேசுவதில்லை, வெளியிலும் வருவதில்லை.ஆனால், வீட்டிற்கு அருகில் யாராவது போனால் பயங்கரமாக திட்டுவார். கேட்க சகிக்காது. அதனால் நாங்கள் யாரும் அவரோடு பழகுவதும்,பேசுவதும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
Add Comment