iv. முவே தாயும் களரிப்பயட்டும்
முவே தாய் என்பது தாய்லாந்தின் பாரம்பரிய சண்டைக்கலை, களரிப்பயட்டு கேரளாவின் பாரம்பரிய சண்டைக்கலை. இந்த இரண்டு சண்டைக்கலைகளுக்கும் உள்ள ஒற்றுமை இவ்விரண்டு கலைகளைக் கற்ற வீரர்களின் உடற்கட்டு பார்ப்பதற்கு ஒன்றுபோல இருக்கும். ஒடுங்கிய வயிறு, உறுதியான தோள்கள், வலிமையான கரங்கள், ‘விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்’ என்னும் பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப சொன்னபடி வளையும் உடல் ஆகியவற்றைத் தங்கள் உடற்பயிற்சியால் சாத்தியப்படுத்துகின்றனர்.
முவே தாயும் களரியும் போர் வீரர்களின் பயிற்சியாகவும் இருந்தன. இந்த இரண்டு சண்டைக்கலைகளிலும் எகிறிப் பாய்ந்து தாக்கக்கூடிய அமைப்பு உள்ளது, கால் நகர்வுகளில் முன்னேறிச் செல்வது, கைகளால் தாக்குவது, முழங்கைத் தாக்குதல்கள், குத்து வரிசைகள் போன்றவையும் ஒன்றில் மற்றொன்றின் சாயல் இருப்பதைக் காணலாம். ஆனால், இரண்டும் அவற்றின் தொடக்கக்காலத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நாடுகளில் உருவானவை. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், களரிப்பயட்டில் ஆயுதப் பயிற்சிகள் உள்ளன, முவே தாய் குத்துச்சண்டையாக மட்டும் பயிற்சிபெறப்படுகிறது. முவே தாய், ‘தாய் பாக்சிங்’ என்றும் அழைக்கப்படுகிறது. போலவே களரிப்பயட்டு, ‘களரி’ என்றும் அழைக்கப்படுகிறது.
Add Comment