17. திரைப்படச் சண்டைக்காட்சிகள்
கதாநாயகர்களை சூப்பர் ஹீரோ, மாஸ் ஹீரோ என உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவை சண்டைக்காட்சிகள். நேற்றைய திரைப்படங்களாக இருக்கட்டும். இன்றைய படங்களாக இருக்கட்டும், எதிரியைச் சண்டையிட்டு வென்றால்தான் அவர் சூப்பர் ஹீரோ. ஒவ்வொரு தலைமுறையிலும் காட்சியமைப்புகளும், கதை சொல்லும் உத்திகளும் மாறிக்கொண்டே இருப்பினும், சண்டைக்காட்சிகளில் கதாநாயகன் வெல்வது மட்டும் மாறவில்லை. ஹாலிவுட்டில் மாஸ்க் ஆஃப் ஸாரோவில் கத்திச்சண்டைக் கதாநாயகன் டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் எதிரிகளை வீழ்த்தினார். பாலிவுட்டில் ருஸ்தம்-ஏ-ஹிந்த் என அழைக்கப்பட்ட தாராசிங் மற்போர் புரிந்தார். அவர்களின் கலவையாக கோலிவுட்டில் எம்.ஜி.ஆர். கத்திச்சண்டையிலும் மற்போரிலும் எதிரிகளை வென்றார். அன்று முதல் இன்று வரையில் மாஸ் ஹீரோ என்றால் சண்டையிட்டு வெல்லவேண்டும் என்பது திரைப்படங்களில் எழுதப்படாத சட்டம்.
ஹாலிவுட்டில் வரலாற்றுத் திரைப்படங்கள் படமாக்கப்பட்டபோது ஏராளமான பொருட்செலவில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. 1959இல் வெளியான பென்-ஹர் என்னும் திரைப்படத்தின் ரதப்பந்தயக் காட்சிகள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. பென்-ஹரின் கதாநாயக நடிகரும் வில்லன் நடிகரும் ரதப்பந்தயக் காட்சிகளுக்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டனர். கதாநாயகர்களுக்காக ஸ்டண்ட் டபுள் எனப்படும் ‘டூப்’ நடிகர்கள் ஆபத்தான சாகசக் காட்சிகளில் நடித்தனர். இதன் முதன்மை சண்டைக்காட்சி அமைப்பாளரின் பெயர் யாகிமா கேனொட். அவருடைய மகனும் சண்டைக்கலைஞராக இந்த ரதப்பந்தயத்தில் நடிக்கும்போது காயமடைந்திருக்கிறார். ஒரு சண்டைக்கலைஞர் உயிரந்திருக்கிறார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் 1952இல் வெளியான ‘ஸ்காராமூஷ்’ திரைப்படத்திலும், இரண்டாயிரத்து இரண்டில் வெளியான ‘டை அனதர் டே’ திரைப்படத்திலும் இடம்பெற்ற வாட்போர்கள் அழகும் வீரமும் இணைந்தவை. ஆனால், பழைய ஜப்பானியத் திரைப்படங்களில் சாமுராய் வகை வாட்போர்களில் அத்தகைய அழகு மிளிராது. சாமுராய் வகைவாட்போர்கள் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ எனத் துரித வாள்வீச்சு வகையைச் சேர்ந்தவை.
Add Comment