சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்திற்கு முன்பாக, கடந்த இரண்டு வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட அறுநூறு பேரை ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் சென்னை காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்தன. பொதுமக்கள் பொங்கி எழுந்து சமூக ஊடகங்களில் அரசைத் தாறுமாறாக விமரிசித்தார்கள்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வசதியாகப் பதினைந்து மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பத்து மண்டலங்கள் கடந்த 2010ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள ஐந்து மண்டலங்களில் இரண்டைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவைச் சமீபத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்திருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் தூய்மைப் பணியாளர்கள் இரண்டு வாரங்களாக ரிப்பன் மாளிகைக்கு முன் போராட்டம் நடத்தி வந்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி, தொடர்ந்து போராட்டம் நடந்து வந்ததால் அந்த இடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்திக் கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டது.
தங்கள் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது, பத்தாண்டுகளுக்கும் மேல் வேலை செய்பவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பளத்தைக் குறைக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் தூய்மைப் பணியாளர்கள்.















சிறப்பு, இதில் பிரபல தேசிய கட்சியின் உள்ளீடு இருந்தது அது கொம்பு சீவிவிட்டது போன்றவைகளை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பு.