எழுத்து என்ற உலகத்தைக் கண்டுபிடித்து, அதில் என் பெயரில் ஒரு பிள்ளையார் சுழி போட்டதுதான் 2024இல் என் மிகப்பெரிய வெற்றி. யாருமில்லா கடையில் டீ ஆற்றுவது போல், சரமாரியாக நாற்பது சிறுகதைகள் எழுதி, செய்வதறியாது ரகசியமாகப் பேணிக் காத்தேன். தேநீரை ருசிக்க ஒரு தளத்தையும், அதனை விமர்சனம் செய்ய ஒரு குழுவையும் அறிந்துகொண்டது அந்த அத்திவரதரையே தரிசித்தற்குச் சமம் என்று நினைக்கிறேன்.
தாயென்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தபின், மகனின் வளர்ச்சி வியப்பை அளித்தது. இரண்டு வருடத்தில் பிறந்து, வளர்ந்து, பேசி, நின்று, நடைபழகி, சாப்பிட்டு… அப்பப்பா எத்தனை மைல்கற்களைச் சாதித்து விட்டான் என் மகன். “இவனுடைய இந்த வளர்ச்சிக்கு நானும் சொந்தம் கொண்டாடுவது அற்பம் அல்லவா. இவன் இத்தனை மைல்கற்களைச் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் எதைக் கிழித்துக் கொண்டிருந்தேன்?”
இந்த விழிப்புணர்வுதான் பாராவின் எழுத்து வகுப்பில் என்னை இழுத்துக்கொண்டு சேர்த்தது, 2023இன் முடிவில். அமெரிக்காவில் இருப்பதால், வகுப்பில் இணைவதே கடினமாக இருந்து. வகுப்பு இந்திய மாலை நேரம், எனக்கு அது விடியற்காலை. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், மகன் எழுந்துகொண்டு பால் என்று அழும் நேரம். பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லை. புரிந்துகொள்ளும் கணவன் இருந்ததால், வகுப்பை முடித்ததே பெரிய சாதனை என அன்று எண்ணினேன்.
Add Comment