இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள். தொடர்ந்து 161 படங்களில் கதாநாயகி. முப்பது ஆண்டுகளுக்கு மேல் நடித்திருந்தாலும் எந்தப் படத்திலும் துணை நடிகை வேடத்திலோ கௌரவ வேடத்திலோ நடித்ததில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் நடித்த 161 படங்களில் 147 படங்கள் வெற்றிப்படங்கள். இப்படிப் பல சாதனைகளுக்குரிய ஒரே நாயகி சரோஜாதேவி, ஜூலை 14ஆம் தேதி அவருடைய எண்பத்தேழாவது வயதில் காலமானார்.
அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று பல பட்டப்பெயர்களில் அழைக்கப்பட்ட சரோஜாதேவி நடிக்க வந்தபோது அவருக்கு வயது பதினேழு. கன்னடத்தில் மகாகவி காளிதாசா என்ற படத்தில் அறிமுகமானார். கிடைத்த வேடங்களில் எல்லாம் நடிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை முதலிலிருந்தே கடைப்பிடித்தார். நடித்தால் நாயகி தான் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார்.
அதனால்தான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் திரையுலகில் கதாநாயகியாகவே நீடித்தார். அனைத்துப் படவுலகிலும் மிகவும் விரும்பப்பட்ட நாயகியாக இருந்தார். எம்ஜிஆர் (26), சிவாஜி (22), ஜெமினி, எஸ்.எஸ். ராஜேந்திரன் எனத் தமிழிலும், என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், ஷோபன் பாபு எனத் தெலுங்கிலும், ராஜ்குமார் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கன்னடத்திலும் கொடிகட்டிப் பறந்தார்.















Add Comment