இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். நோக்கமின்றி, பாதையின்றி, என்னவென்று தெரியாத எதையோ நோக்கிப் பயணிக்கையிலும், இராவணப் பேரரசனும், சீதாதேவியும், இராமக் கடவுளும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இம்முறை சீதைக் கோட்டை.
உண்மையில் அது சிறிது நெடுந்தொலைவில் காட்டை ஊடறுத்துச் செல்கிற காட்டுவழிப்பயணம். தூரத்தில் ஓடுகிற நீரோடையின் சத்தம் காதிற்குள் மென்மையாகக் கேட்டுக் கொண்டே இருக்கும். வானளாவி வளர்ந்து நிற்கின்ற உயர்ந்த மரங்களும், வளைந்து அந்த காடு முழுவதும் படர்ந்திருக்கின்ற கம்பீரமான கொடிகளும், கற்பாறைகளும், அடிபருத்த உயர்ந்த மரங்களும், ஓட்டைகளும் அந்த காட்டை உருவாக்கியிருந்தன. சூரிய ஒளி அளவாக அந்தக் காட்டிற்குள் ஊடுருவிக் கொண்டிருந்தது. தூரத்தில் அடிக்கடி எழுகிற மயில்களின் அகவல் சத்தம் காட்டிற்குள் திடீரென ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது. இந்தக் காடு மிகப் புராதனமானது. நாமறியாத பல்லாயிரம் காட்சிகளுக்குச் சான்று. ஆனால் அது மிகவும் மௌனமாக அந்தச் சான்றைச் சொல்லிக் கொண்டிருந்தது.
Add Comment