இது 2024-ம் ஆண்டுக்கானக் கட்டுரை என்றாலும் ஒரு பிளாஷ்பேக்குடன் இதனை ஆரம்பிப்பது சரியாக இருக்குமென்றுத்தோன்றுகிறது. பள்ளி, கல்லூரி நாட்களில் எழுதியும், பேசியும் பெற்ற அனுபவங்கள், பரிசுகள் தந்த தைரியத்தில் 1990 களில் ஆரம்பித்து 2000ஆண்டு வரை சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், ஜோக்குகள் ஆகியவற்றை சராமாரியாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பேன். சுவற்றில்அடித்த பந்துப்போல அவை பத்திரமாக எனக்கே திரும்ப வந்துவிடும். கூடவே ஒரு கடித இணைப்பிருக்கும். அதில், உங்கள் படைப்பினைப்பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். இதனை உங்கள் படைப்பினைப்பற்றிய அளவீடாக எடுத்துக்கொள்ளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்றெல்லாம் எழுதி யாரேனும் ஒருவர் கையொப்பமிட்டிருப்பார். இப்படியாக விகடன், குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகளிடமிருந்து வருந்துகிறோம் கடிதம் மட்டுமே எனக்கு வந்துக்கொண்டிருந்தது. ஆனால், மாவட்டஅளவில் உள்ளூர் செய்தித்தாள்களில் போட்டிகளில் கலந்து பரிசுகள் வாங்கிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்ததினால், வெகுஜனப் பத்திரிக்கையில் எனது பெயரையும், படைப்பினையும் பார்த்துவிடுவது என்பது எனக்கு ஒரு வெறியாக மாறிவிட்டிருந்தது.
ஆனால் விதி வேறுமாதிரி வேலை செய்தது. ஒரு பக்கம் தொழிலில் முன்னேற்றம் சரியாக கைக்கொடுக்கவே, நாளடைவில் எழுதுவதும், அதனை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் குறைந்து, ஒரு கட்டத்தில் அது நின்றே போனது. இனி அவ்வளவுதான். இந்தப்பழம் புளிக்கும் என்று முடிவு செய்துவிட்டு அனைத்தையும் மறந்தேப்போனேன். கிட்டத்தட்ட முற்றும், என எழுதிவிட்டு கதவை சாத்தும் நிலை. எனது ஜாதகத்தில் இரண்டாவது இன்னிங்க்ஸ் எழுத்தினால் யோகம் என்றிருக்கும் போல. கிட்டத்தட்ட 20ஆண்டுகள் கழித்து எனது கனவுகள் நனவாக ஒரு வாய்ப்பு வந்தது. அது வந்த நேரம்கூட ஒரு துன்பமான வேளைதான். அப்பாவிற்கு ஈமக்கிரியைகள் செய்ததினால் ஒரு பத்துநாள் எங்கும் வெளியே போகாதே என வீட்டில் சொல்லியிருந்தார்கள். அலுவலகத்தை உதவியாளர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு சதா செல்போனை நோண்டிக்கொண்டிருந்தேன். வாத்தியார் பாராவின் நட்புவட்டத்தில் நான் இருந்ததினால் அவ்வப்போது அவரது பதிவுகள் கண்ணில்படும். அவரது எழுத்துப்பயிற்சி வகுப்பு விளம்பரம் வந்திருந்தது. அதனை பார்த்துவிட்டு சேரலாமா, வேண்டாமா என்பது இரட்டைமனதாகவே இருந்தது.
Add Comment