சேர்ந்தேவிட்டார் செங்கோட்டையன். மத்தியில் ஆளும் பாஜகவிலோ மாநிலத்தில் ஆளும் திமுகவிலோ அல்ல. புதிதாகத் தொடங்கப்பட்டு, மக்கள் மத்தியில் இன்னும் தன் செல்வாக்கை நிரூபிக்காத விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார்.
1972ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து அரசியலில் இருக்கிறார். 1975ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவைத் திறம்பட நடத்தி எம்ஜிஆரின் நன்மதிப்பைப் பெற்றார். 1977ஆம் ஆண்டு முதன்முதலாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஒன்பது முறை போட்டியிட்டு எட்டு முறை வென்றிருக்கிறார். 1996ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்திருக்கிறார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெ அணி, ஜா அணி என இரண்டாகப் பிளந்த அதிமுகவில் செங்கோட்டையன் ஜெ அணியிலிருந்தார். அன்று முதல் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப்பயணங்களைத் திட்டமிடும் குழுவில் பாராட்டத்தக்கப் பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை, வனத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, விவசாயத்துறை, வருவாய்த்துறை எனப் பல துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.














Add Comment