நெய் மைசூர் பாகு. கையில் எடுக்கும்போதே பஞ்சு போல நெகிழும். நாக்கில் லேசாக ஒட்டி தொண்டைக் குழிக்குள் நழுவிவிடும். நெய் வாசனையா?, லேசான தித்திப்பா? கடலை மாவின் மென்மையா? -எது இன்னொரு விள்ளலை எடுக்கச் சொல்லும் என்பது தெரியாது. ஒன்று போதும் என்று மூளை சொன்னாலும் நாக்கில் ஒட்டிக்கொண்ட ருசி கையை இயக்கி ‘இன்னும் ஒண்ணே ஒண்ணு’ என்று எடுக்கச் செய்வதைத் தவிர்க்கவே முடியாது.
ஒரு கப் கடலை மாவுக்கு ஒரு கிலோ நெய்யைக் கொட்டினால்தான் அப்படிப்பட்ட பஞ்சு மைசூர்பாகைச் செய்ய முடியும். நாமாகச் செய்யும்போது, கண்ணை மூடிக்கொண்டு டப்பா நெய்யை முழுதும் கவிழ்க்க முடியாது. எனவே வீட்டில் செய்யும் மைசூர் பாகு, சற்றுக் கொரகொரப்பாகத்தான் இருக்கும். ‘உடைத்தால் உள்ளே கூடு கூடாக இருக்க வேண்டும், அதுதான் பதம்’ என்பர். பதம் சற்றுப் பிந்தி விட்டால் செங்கல் போலக் கெட்டியாகிவிடும். கொஞ்சம் முந்தி எடுத்துவிட்டால் அல்வா போல நெகிழ்ந்து விடும்.
இதனால்தான் அப்படியான முயற்சிகளையே எடுப்பதில்லை. அவ்வளவு நெய்யையும் சர்க்கரையையும் கொட்டி வீணாகிவிட்டால் என்னாவது? அத்தாட்டி போன்ற அனுபவசாலிகள் செய்யும்போது அணில்போல அருகிலிருந்து உதவுவதோடு சரி.
Add Comment