மேகாலயாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த அம்மா – மகள் இணை, ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் இருபது லட்ச ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளனர். சோனி லிவ் நடத்தும் ரியலிட்டி ஷோ ஷார்க் டேங்க். வியாபாரத்தில் உச்சம் தொட்டவர்களை ஷார்க் என்று செல்லமாக அழைப்பார்கள். ஷார்க் டேங்க், என்றால் புதுப் புது வியாபார யோசனைகளைப் போட்டு வைக்கும் பெட்டி என்றும் பொருள் கொள்ளலாம்.
கூர்மையான வணிகத் திறன்களுடன் விரைந்து முடிவெடுக்கும் குணம் கொண்ட, தொழிலில் வெற்றி கண்ட சுறாக்கள்தாம் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள். புதுமையான யோசனைகள் இருக்கின்றன, எப்படி வணிகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்கிற திட்ட வரைவும் இருக்கிறது தேவையான பணம் மட்டும் இல்லை என்போர் அல்லது சிறியதாக நடந்து கொண்டிருக்கும் வணிகத்தை விரித்தெடுக்கும் கனவு கொண்டோர் ஷார்க் டேங்கின் பங்கேற்பாளர்கள்.
வியாரபரத்தில் வெற்றி பெறும் கனவுடன் வருபவர்கள், தங்கள் திட்டங்களைத் தெளிவாக விளக்க வேண்டும். கூடியோ, குறைத்தோ இல்லாமல் எவ்வளவு தொகை தேவை என்பதைச் சரியாகக் கணித்துக் கேட்க வேண்டும். ‘புழக்கத்தில் இல்லாத புதிய பொருளை மக்களிடம் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பீர்கள்? மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் என்ன மாற்றுத் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?’ போன்ற கேள்விகளுக்கு பூசி மெழுகாமல் சாத்தியமாகும் நடைமுறைகளைச் சொல்ல வேண்டும். திட்டத்தின் மீது நம்பிக்கை வந்துவிட்டால் சுறாக்கள் தனியாகவோ, கூட்டாகவோ அந்த வணிகத்தில் முதலீடு செய்வர்.
Add Comment