2025 ஜூலை 06. எப்போதும் போல ஒருநாளாக அன்றைய தினம் இருக்கவில்லை. ஆசான் பாராவுக்கு அனுப்பிய மின்னஞ்சலொன்றுக்கு அவரிடம் இருந்து பதில் வந்திருந்தது. எட்டே சொற்கள்தான். ‘இது வாட்ஸப் இலக்கம். வாருங்கள், பேச வேண்டும்.’ பொதுவாக மின்னஞ்சல் கணக்கை நான் அடிக்கடி பரிசோதிப்பதில்லை. ஆகவே அன்று மாலைதான் வாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். புளூடிக் மட்டுமே வந்திருந்தது.
பேச வேண்டும் என்றால் அழைத்துப் பேசுவார் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. அடுத்த நாள்தான் பதில் வழங்கியிருந்தார் ஆசான் பாரா. மெட்ராஸ் பேப்பருக்கு எழுதுங்க. அவ்வளவுதான். மேலதிகமாக என்னைப் பற்றிய சில தகவல்களைக் கேட்டிருந்தார். சுருக்கமாகவும் நேரடியாகவும் பேசுபவர் ஆசான். பெரும்பாலான வாட்ஸப் செய்திகளுக்கு புளூடிக் மட்டுமே பதிலாக இருக்கும். ஆனாலும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் உரிய நேரத்தில் பதில் வந்து சேரும்.
நான் எழுதிய வாசகர் கடிதங்களும் புத்தக மதிப்புரைகளும் மட்டுமே அவர் அறிந்த என் எழுத்துக்களாக இருந்தன. அவ்வப்போது ஆசானின் மின்னஞ்சலுக்குச் சில கடிதங்களையும் எழுதியிருந்தேன். அவற்றைத் தொடர்ச்சியாக அவதானித்து, எழுத்து சுத்தமாக இருக்கிறது, உங்களால் எழுத முடியும் என்று மெட்ராஸ் பேப்பருக்கு அழைத்து வந்தார்.















Add Comment