யெமனின் ஹூதி போராளிகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்க்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்க்கும் இந்தச் செயலியின் மூலமாகவே பகிர்ந்துள்ளார். இப்படி அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளால் போர் விவரங்கள் உரையாடும் அளவு பாதுகாப்பானது, ”சிக்னல்” என்கிற அரட்டைச் செயலி. வாட்ஸ்ஆப் செயலியில் ரகசியமாக அரட்டையடிக்கப் பயன்படுத்தப்படும் சிக்னல் மறையாக்கு நெறிமுறையின் தோற்றம் இந்த சிக்னல் செயலியே. இதன் வரலாற்றை இங்கே தெரிந்து கொள்வோம்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை ஒரு மென்பொருள் பரத்தையாக (சைபர்பங்க்) அடையாளப் படுத்திக் கொண்டவர் மோக்ஸி மார்லின்ஸ்பைக் (Moxie Marlinspike). அதற்கேற்ப அந்தக் காலங்களில், பின்னப்பட்ட குதிரைவால் முடியோடு இருக்கும் இவருடைய மேடைப் பேச்சுகளை இன்றும் யு-ட்யூப்பில் பார்க்கலாம். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 1980களில் பிறந்தவர் மோக்ஸி. இங்கே 80களில் என்று மட்டுமே சொல்லியுள்ள காரணம் இவர் தனது தனிப்பட்ட விவரங்களை வெளியிட விரும்புவதில்லை, அதை ரகசியமாக வைத்துள்ளார். தன்னை போலவே எல்லோரும் அவர் அவர்களின் அந்தரங்க விவரங்களைப் பாதுகாப்பது அவசியம், அது அவர்களது அடிப்படை மனித உரிமை என்பதில் தீவிரமான நம்பிக்கையுள்ளவர் மோக்ஸி.
இந்த நம்பிக்கையே இன்று உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சிக்னல் மறையாக்கு (நெறிமுறை) கட்டமைப்பை இவர் உருவாக்கக் காரணமானது. இணையத்தில் தனது உண்மையான அடையாளம் தெரியாமல் கலந்துரையாட, திறமூல மென்பொருள்களை வெளியிட இவர் வைத்துக் கொண்ட புனைபெயர் மோக்ஸி. தன்னார்வ மாலுமியான இவர், கடல் பயணங்களில் தனக்கிருக்கும் ஆர்வத்தினால் வைத்துக் கொண்ட பெயர் இது. இதில் மோக்ஸி என்பது மனவுறுதியையும், மார்லின்ஸ்பைக் என்பது கப்பல்களில் பயன்படுத்தும் கயிறுகளைப் பிரிக்கப் பயன்படுத்தப்பட்டும் முள் போன்ற ஆணியையும் குறிக்கிறது. இவரின் உண்மையான பெயர் மத்தியூ ரோசன்ஃபீல்ட்.
Add Comment