5. புரியாதவற்றின் அதிதேவதை
அந்த அச்சத்தை மட்டும் சரியாக விவரிக்க முடிந்துவிட்டால் என்னைக் காட்டிலும் சிறந்த எழுத்தாளன் இன்னொருவன் இருக்கவே முடியாது. ஆனால் அது சொற்களைத் தோற்கடிக்கவென்றே தோற்றுவிக்கப்பட்ட அச்சமாக இருந்தது. எப்போது அது கருவுற்று வளர ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை. கவனிக்காத பொழுதில் திருட்டுத்தனமாகத்தான் உருக்கொள்ள ஆரம்பித்திருக்கும். கவனித்த பொழுது அழிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டிருந்தது.
அதற்கு நிறம் இல்லை. வாசனை இல்லை. உருவம் இல்லை. உறுப்புகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நகங்கள் இருந்திருக்க வேண்டும். ரத்தம் வராத அளவுக்கு, ஆனால் இடைவிடாமல் சுரண்டிக்கொண்டே இருந்த நகங்கள்.
அதன் காரணம் எளிமையானது. என்னையறியாமல் நான் ஒரு சிறந்த மூடனாக அப்போது உரு மாறிக்கொண்டிருந்தேன். பாடங்கள் எதுவும் மனத்தில் பதிய மறுத்தன. வகுப்புகளில் ஆசிரியர்கள் சொல்லித்தருவது காதில் விழும். ஆனால் ஒரு சொல்கூட உள்ளே போகாது. வேறு எதையாவது யோசித்துக்கொண்டிருந்தேனா என்றால் இல்லை. விவரிக்க இயலாததொரு வெறுமையை விரும்பினேன் என்று நினைக்கிறேன். அல்லது விவரிக்க இயலாததொரு வெறுமை என்னை மிகவும் விரும்பியது. நாம் சரியாகப் படிப்பதில்லை, எதிர்காலம் இருளப் போகிறது என்று ஒரு பக்கம் தோன்றிக்கொண்டே இருக்கும். இன்னொரு புறம் இது எதற்கும் அவனைத் தவிர வேறு யாரும் காரணமல்ல என்றும் தோன்றும்.
Add Comment