உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குகைகளின் மடாலயத்தைப் பனி மூடியிருக்கிறது. குண்டு விழுந்ததற்கான தடயங்கள் ஏதுமின்றி நகரமே பனியில் உறைந்திருக்கிறது. போர் தொடங்கிய நான்கு வருடங்களில் முதல் முறையாகத் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதால் ரஷ்ய அதிபர் புதின் தனது கருணை முகத்தைக் காட்டியிருக்கிறார். உக்ரைன் -24 டிகிரி செல்சியஸில் உறையுமென்று வெளியான வானிலை அறிக்கையை முன்னிட்டே இந்தப் பச்சாதாபம். அதுவும் சில நாள்களில் முடிவுக்கு வரப் போகும் பனிப்பொழிவு இருக்கும் வரை மட்டுமே. அதன் பிறகு முன்பு போலவே இருதரப்பும் மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் உற்பத்தி, விநியோகத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். மில்லியன் கணக்கில் மக்கள் குளிரால் அவதிப்படுவார்கள்.
அதற்குள் அபுதாபியில் நடந்து வரும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நல்ல செய்தியைத் தந்தால் நலம். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ரஷ்யாவின் துணையோடு அமெரிக்கா தயாரித்து, உக்ரைன் திருத்திய பதினெட்டு அம்ச அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலான நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தடுத்த சுற்றுகளுக்கு உக்ரைன், ரஷ்ய அதிபர்கள் நேரில் சந்திக்கவும் அழைப்பு விடுக்கிறார்கள்.















Add Comment