ஐநாவின் பருவநிலை மாநாடு இவ்வருடம் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான OPECக்குப் போட்டியாகத் தங்கள் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி அளவுகளைப் பல மடங்கு பெருக்கியுள்ள தென் அமெரிக்காவில்தான் ‘இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்’ என்கிற பெயரில் இந்த மாநாடு நடந்துவருகிறது.
பிரேசில், கயானா, அர்ஜென்டினா ஆகிய மூன்று நாடுகளும் தற்போது உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளுக்கு வெளியே அதிக உற்பத்தி அளவுகளோடு இருப்பதும் மேற்படி தேசங்கள்தாம். வரும் ஆண்டுகளில் எண்ணெய் வள நாடுகளில் மும்மூர்த்திகளாக இருக்கப்போவதும் இவர்கள்தாம்.
அமேசான் நதி அட்லாண்டிக்கில் பாயும்போது வண்டல் நீர் சேரும் பிரேசிலின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் இரண்டு பெரிய கண்டுபிடிப்புகள் நடந்திருக்கின்றன. முதலாவது, மூவாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழ்கடல் பவளப்பாறைகள். இவை கண்டுபிடிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கும் குறைவாகவே இருக்கும். தற்போது இந்தப் பகுதியில் இந்தப் பவளப்பாறைகளுக்கு அடியோடு ஆபத்தை விளைவிக்கும் எண்ணெய் இருப்பை உறுதிசெய்துள்ளனர். பண்டைய காலப் புதைபடிவங்களுக்கு அடியில் பல பில்லியன் பேரல் அளவிலான எண்ணெய் வளம் இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. அதை ஆராய்வதற்கான ஒப்புதல்களைச் சில வாரங்களுக்கு முன்பு வழங்கியிருக்கிறார்கள்.














Add Comment