தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறான். அவனை மடக்கி விசாரிக்கிறார் வைஸ்-பிரின்சிபல். தோள்பையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் துணை முதல்வரை எகிறி எகிறி அடிக்கிறான் அந்தச் சிறுவன். திட்டிக்கொண்டே தலையால் முட்டுகிறான். கைப்பையால் நெட்டித் தள்ளுகிறான். இறுதியில் பள்ளியிலிருந்து ஓடி விடுகிறான்.
ஏதோ ரீல்ஸுக்காக எடுக்கப்பட்ட துணுக்கு அல்ல இது. உடன் பணிபுரியும் ஆசிரியர்களால் படம் பிடிக்கப்பட்ட உண்மை நிகழ்வு. அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு கையைப் பின்னால் கட்டிக்கொண்டு நிற்கிறார் ஆசிரியர். ‘அனுமதி இல்லாமல் எங்கே போகிறாய்? நீ என்ன செய்கிறாய்? இது தவறு’ என்று மட்டுமே சொல்கிறார்.
‘பிள்ளையைத் திருப்பி அடிக்க வேண்டாம், தடுத்தாவது இருக்கலாமே?’ என்று கேட்கத் தோன்றலாம். கையை அழுத்திப் பிடித்தால் அது அவன் கையில் தடமாகப் பதிந்து விடும். ‘என் பிள்ளையைத் துன்புறுத்தி விட்டார்’ என்று அதை வைத்து ஆசிரியரின் மேல், பெற்றோர் வழக்குத் தொடரலாம். தேவையில்லாத மன உளைச்சல், அலைச்சல். எதற்கு வம்பு என்றுதான் ஏசுபிரான் போல நின்று கொண்டிருக்கிறார் அந்த ஆசிரியர்.
Add Comment