அறுநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். இருபது லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளன. பல கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின. மக்களின் சொத்துக்கள் அழிவடைந்தன. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள், கல்விச் சான்றிதழ்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயின. நெல் வயல்கள், மரக்கறி பயிர்கள், தானியங்கள் அழிவடைந்துள்ளன. வாகனங்கள், கடைகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் பாரிய சேதத்தைச் சந்தித்துள்ளன.
ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு பாதிப்பு. இதுவரை காலமும் சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணம், பொருள், காணி, வீடு என எல்லாமும் ஒரே நாளில் இல்லாமல் போயிருக்கிறது. தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்னவென்று தெரியாமல் தவித்துப் போயிருக்கிறார்கள் மக்கள்.
சுனாமி, ஈஸ்டர் தாக்குதல், கொரோனா, பொருளாதார நெருக்கடி – இவற்றுக்குப் பின்னர் நாட்டை கடுமையாகப் பாதித்திருப்பது டிட்வா புயல் பேரிடர்தான். இலங்கையின் ஒரு சில பகுதிகளைத் தவிர மற்றைய எல்லாப் பகுதிகளிலுமே மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிட்வா புயல் ஏற்படுத்திய சேதங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆறு முதல் ஏழு பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் அழிவடைந்திருக்கலாம் எனச் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. முதலாம் கட்ட சேத மதிப்பீட்டைச் செய்ய உதவுவதாக உலக வங்கி சொல்லியிருக்கிறது. அரசாங்கமும் தன் பங்குக்கு அரச அதிகாரிகளை வைத்து தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது.














Add Comment