அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம், பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இலங்கை வருகிறார்.
தூதுவராலயம் வழக்கத்தைவிடப் பரபரப்பில் இருந்தது. அவர்களின் ஆதங்கம் இதுதான். ‘சர்வதேசம் எங்கும் ஈரான் பேசுபொருளாகி, மத்தியக்கிழக்கின் எரியும் பிரச்னைகளில் பெட்ரோலாக உருமாறியிருக்கும் நிலையில் அதன் அதிபர், இலங்கைக்கு எதற்கு வரவேண்டும்..? நாம் ஓரம் கட்டிய ஈரான், நாம் பொருளாதாரத் தடை விதித்த ஈரான், நாம் தீமையின் அச்சாணி என்று அறிவித்த ஈரான்….’
நேரடியாகவே போய் இலங்கை வெளிநாட்டமைச்சிடம் விளக்கம் கேட்டது அமெரிக்கத் தூதரகம். பகிரங்கமாய்த் தன் கவலையை வெளிப்படுத்தியது. இதேவேளை சி.ஐ.ஏவும், மொசாடும் இவ்விஜயம் தொடர்பாய் அவதானத்துடன் இருப்பதாக சர்வதேசச் செய்திச் சேனல்கள் வழியாக இலங்கையில் விஷயம் பரவிய போது, ’எமது நாட்டின் இறையாண்மையில் தலையிட அமெரிக்காவிற்கு என்ன யோக்கியதை இருக்கிறது..?’ என்று ஃபேஸ்புக்கில் நெட்டிஷன்களால் தீர்ப்பு எழுதப்பட்டது. சும்மாயிருந்த இலங்கை மீடியாக்களுக்கு வெறும் வாய்க்கு மெல்ல பாதம், பிட்ஸாபோல இவ்விவகாரம் மாறிப் பெரும் அல்லோலகல்லோலமான போது ரெய்ஸி பாகிஸ்தான் விஜயத்துடன் அப்படியே நாட்டுக்குத் திரும்பிவிடுவார் என்று சொல்லப்பட்டது.
Add Comment