மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறிவிட்ட நம் தமிழ்நாட்டிலும் மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் வாங்கும் நடைமுறை எந்தச் சிக்கலும் இல்லாதது. பல நாடுகளில் மருத்துவருடைய பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வாங்க முடியாது என்பது நமக்கு ஆச்சரியமான செய்தியாகவே இன்றைக்கும் இருக்கிறது. இந்தப் போக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை இருபது குழந்தைகளைப் பலி கொடுத்த பிறகு உணர ஆரம்பித்திருக்கிறோம்.
மத்தியப்பிரதேச மாநிலம் சந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்தை உட்கொண்டதால் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர். பாரசியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கடந்த மாதம் பல குழந்தைகள் சளி மற்றும் இருமல் பிரச்சினைக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவர் பிற மருந்துகளோடு இருமல் மருந்தையும் பரிந்துரை செய்திருக்கிறார். அந்த மருந்தை உட்கொண்ட குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
சில நாள்களுக்குப் பிறகுதான் அந்த மருந்து தன் வீரியத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. சிறுநீர் வெளியேறுவது முற்றிலுமாக நின்றுவிட்டது. முகவீக்கம், வாந்தி போன்ற உடல் உபாதைகள் அதிகரித்தபடியே இருந்திருக்கின்றன. அந்தக் குழந்தைகள் நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்திருக்கின்றன.














Add Comment