செப்டம்பர் 26, 2025. இரண்டு நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்ட இணையச் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால் ஆப்கன் மக்கள் சற்று ஆசுவாசமடைந்தனர். தாலிபான் அரசு ஆப்கனிஸ்தான் முழுவதும் இணையச் சேவைகளைத் துண்டித்ததால் நாடே ஸ்தம்பித்துப்போனது. ஆப்கனிஸ்தானின் விமான நிலையங்கள் மூடப்பட்டன.மருத்துவமனைகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின.
2025 ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் வெற்றி தினத்தைக் கொண்டாடினர். 2021ஆம் ஆண்டு இதே நாளில்தான் அமெரிக்க ராணுவம் ஆப்கனிஸ்தானிலிருந்து வெளியேறியது. தாலிபான்கள் ஆப்கனிஸ்தான் தலைநகரமான காபூலைக் கைப்பற்றினர். ஆப்கனிஸ்தானுக்கு Islamic Emirates of Afghanistan(IEA) என்று பெயர் சூட்டினர். தாலிபனின் முதன்மை தலைவராக ஹிபதுல்லா அறிவிக்கப்பட்டார். இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆப்கனிஸ்தானின் அரசியலமைப்பு செயல்பட்டது.
தாலிபன்களின் ஆட்சியில் கடுமையான சட்டங்கள் அமலுக்கு வந்தன. குறிப்பாக, பெண்களுக்கு எதிராகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. கணவர் அல்லது தந்தையின் துணையின்றி வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டது. ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பெண் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. குறைந்தது 1.4 மில்லியன் சிறுமிகளின் கல்வி உரிமையைத் தாலிபான் அரசாங்கம் பறித்துள்ளதாக ஐ.நா அறிக்கை சொல்கிறது.














Add Comment