சூடான், ஆங்கிலேயரிடமிருந்து 1956ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. வடக்கு சூடானில் அரபு முஸ்லீம் ஆட்சியின் ஆதிக்கம் இருந்தது. இவர்கள் தெற்கின் கிறிஸ்தவ மற்றும் பாரம்பரிய மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கையாண்டனர். எனவே 1956ஆம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டுப் போர், 2005ஆம் ஆண்டு வரை நீடித்தது. சூடான் மக்கள் விடுதலை இயக்கம் எனும் அமைப்பு தெற்கு சூடானுக்காகப் போராடியது.
2005இல் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின்படி தெற்கு சூடானுக்கு வாக்கெடுப்பு உரிமை கிடைத்தது. 2011 ஜனவரியில் நடந்த வாக்கெடுப்பில், 98 சதவீத மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் விளைவாக, 2011 ஜூலை 9ஆம் தேதி சூடானிடமிருந்து விடுதலை பெற்று உலகின் இளம் நாடாக மாறியது. பல்லாண்டு காலப் போராட்டத்தின் பலனாக, உலகளவில் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி நாடாக உருவெடுத்தது தெற்கு சூடான்.
சுதந்தரத்தின் முதல் நாள் மகிழ்ச்சியில் மக்கள் தெருக்களில் கொடியசைத்து ஆர்ப்பரித்தனர். ஆனால் அந்தக் கொண்டாட்டம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. அரசியல் போட்டி மற்றும் இனப் பிரிவுகளிடையே வலுத்த வேற்றுமைகள், நாட்டின் அமைதியைச் சீர்குலைத்தன. தெற்கு சூடானின் ஜனாதிபதி, நாட்டின் பெரும்பான்மையான டிங்கா இனத்தவரான சல்வா கீர். நியூர் இனத்தவரான ரீக் மாச்சார் துணைத் தலைவர். இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட அரசியல் முரண்பாடு 2013ஆம் ஆண்டு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. அப்போரில் சுமார் நான்கு லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.















Add Comment