தாலிஸ்மன் சாபர் (Talisman Sabre) என்பது 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இணைந்து தொடங்கிய ஒரு கூட்டு ராணுவப் பயிற்சித் திட்டம். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த இருதரப்புப் பயிற்சியில், 2015ஆம் ஆண்டில் நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டு, இன்று 19 நாடுகள் பங்கெடுக்கும் உலகின் பெரிய, அதிநவீனப் பன்னாட்டு ராணுவப் பயிற்சியாகப் பரிணமித்துள்ளது.
ஹவாய் தீவுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ரிம்பாக் (RIMPAC – Rim of the Pacific Exercise) உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ராணுவக் கூடலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த வருடம் 35,000 வீரர்களுடன் நடக்கும் தாலிஸ்மன் சாபர் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு அருகே பப்புவா நியூ கினியாவில் நடத்தப்படுவதும், முதன்முறை இதில் இந்தியா பங்கெடுப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்துதல், வெவ்வேறு தேசத்து ராணுவங்களுக்கிடையேயுள்ள இணைப்புத் திறனை (Interoperability) மேம்படுத்துதல், அவசர நிலைகளைச் சமாளித்தல் (Crisis Management) ஆகியவை இப்பயிற்சிக்கான நோக்கங்களாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பப்புவா நியூ கினியா வரை விரிவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி, வெறும் ஒத்திகை என்பதைத் தாண்டி ஒரு வலிமையான அரசியல் செய்தி இருப்பதை உணர்த்துகிறது.















Add Comment