காஸாவின் நிவாரண முகாம்களில் உணவுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல்களில் 850க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். ஏற்கெனவே ஹமாஸ் உடனான போரினால் தொண்ணூறு சதவீதம் உருக்குலைந்துவிட்ட காஸாவில், இப்போது உணவுக்காகப் போராடும் மக்களும் கொல்லப்படுவது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் கொடூரப் போரினால், பாலஸ்தீனத்தின் காஸா பகுதி ஏறக்குறைய நிர்மூலமாகிவிட்டது. அதில் வசித்துவரும் சுமார் இருபத்தோரு லட்சம் மக்களும் உள்நாட்டுக்குள்ளே அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் போரில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பத்தொன்பதாயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுமார் பதினெட்டாயிரம் குழந்தைகளும் அடக்கம். இத்தனை கோரமான ஒரு போர் அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், உலக நாடுகளால் இதை நிறுத்த எதுவும் செய்ய முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பின்புல பலத்துடன் இந்தப் போரில் விடாப்பிடியாக ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்.















Add Comment