டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அசர்பைஜான் நாட்டிலிருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டின் லெ போர்ஜே (Le Bourget) விமான நிலையத்திற்கு வந்தபோது இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்தது.
ஃபிரான்ஸ் நாட்டுச் சட்டங்களின் படி நான்கு நாள்கள் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டு, பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். சுமார் 46 கோடி ரூபாய் (5 பில்லியன் யூரோ) மதிப்பில் பின்னர் பிணை வழங்கப்பட்டது. என்றாலும் எக்காரணம் கொண்டும் ஃபிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும், தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். இப்போது நீதிமன்ற மேற்பார்வையில் அவர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாக, பாவெல் துரோவ் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல், இணையவழி குற்றங்களுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இணையதளங்களில் சிறார்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு ஆஃப்மின் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆஃப்மின் அமைப்பு ஏற்கனவே பாவெல் துரோவ்வுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்த நிலையில், இந்தக் கைது நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
Add Comment