ஹைதராபாத்தில் பிரபல தொழில்நுட்ப மையத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு வனத்தைக் காப்பாற்ற மாணவர்களும் பொதுமக்களும் மாநில அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வனப் பகுதியை ஒட்டியுள்ள ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக வளாகம் கலவரப் பகுதியாகக் காட்சியளிக்கிறது. அந்த வனத்தை இப்போது காப்பாற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் அந்தப் பகுதியே வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்.
தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ளது கஞ்சே கச்சிபௌலி கிராமம். அக்கிராமத்தின் அருகில் நாநூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது அந்தக் காடு. இதில், எழுநூறுக்கும் மேற்பட்ட வகைத் தாவரங்கள் உள்ளன. சுமார் பத்து வகையான பாலூட்டி விலங்குகளும் பதினைந்து வகையான ஊர்ந்து செல்லும் உயிரினங்களும் வாழ்கின்றன. தோராயமாக, இருநூற்று இருபது வகையான பறவைகளுக்கும் புகலிடமாக உள்ளது.
பல உயிரினங்கள் வாழும் இந்த நிலத்தை ஏலம்விடத் தெலுங்கானா மாநிலத் தொழில்துறை உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு (TGIIC) மாநில அரசு அனுமதி அளித்ததாகக் கடந்த மாதத் தொடக்கத்தில் செய்தி வெளியானது. அப்போதே ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் தொடங்கியது. எண்பது, தொண்ணூறுகளில் இந்த நிலம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக இருந்தது. அதற்கு முன்பு மேய்ச்சல் நிலமாக இருந்தது இந்த கஞ்சே கச்சிபௌலிக் காடு. கஞ்சே என்ற வார்த்தைக்குத் தெலுங்கு மொழியில் மேய்ச்சல் என்று பொருள்.
Add Comment