மண் சொல்லும் சேதி
இரண்டாயிரத்து இரண்டாம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் அது. இங்கிலாந்திலுள்ள சொஹம் (Soham) கிராமத்தினர் மிகவும் கவலையாக இருந்தனர். ஹோலியையும் ஜெசிக்காவையும் நீண்ட நேரமாகத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இருவரும் பத்து வயதே நிரம்பிய இணைபிரியாத் தோழிகள். இனிப்பு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தார்கள்.
அந்தப் பெண்கள் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் பராமரிப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இயான் ஹன்ட்லீ இதுகுறித்து மிகவும் வருந்திக்கொண்டிருந்தான். ‘அவர்கள் மிகவும் சந்தோஷமான அற்புதமான குழந்தைகள். இது ஒரு பெரிய சோகம்’ என்று புலம்பினான். ஹன்ட்லியின் வீடு பள்ளி வளாகத்திலேயே இருந்தது. பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றிவரும் அவனது காதலி மாக்சின் கர்-ருடன் அங்குத் தங்கியிருந்தான்.
அவனது மிதமிஞ்சிய புலம்பல்கள் போலிசாரின் கவனத்தை ஈர்த்தன. இது குற்றவாளிகளின் நடத்தைகளுள் ஒன்று. அவனது பெயரைச் சிவப்புப் பேனாவால் சுழித்து வைத்துக்கொண்டார் காவல் ஆய்வாளர். தொடர்ந்து, ஜெசிக்காவின் கைப்பேசி சிக்னல்கள் ஆராயப்பட்டன. அது கடைசியாக ஹன்ட்லியின் வீட்டுக்கருகில் துண்டிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார்கள்.
Add Comment