கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும்
தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. பிரித்துப்பார்த்தவர்கள் நடுங்கிப்போனார்கள். துண்டிக்கப்பட்ட இரண்டு கால்களும் வலது கையும் அதனுள் கிடந்தன.
தனிப்படையொன்று இறந்தவர் யாரெனத் தீவிரமாகப் புலனாய்வு செய்தது. தடயவியல் ஆய்வின்படி, அவை முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணுக்குரியவை. இறந்து ஓரிரு தினங்கள் கடந்திருக்கலாம். துண்டிக்கப்பட்ட கையில், சிவபார்வதியும் டிராகனும் பச்சைகுத்தப்பட்டிருந்தன. சிவபார்வதி குறி இறந்தவர் இந்து மதத்தவர் என்பதைக்காட்டியது.
காவல்துறைக்குக் கிடைத்த ஒரே தடயம் இதுதான். இந்தக்குறிகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. அதற்கு ஒருவாரத்தில் பலன் கிடைத்தது. இதுபோன்ற பச்சைகுத்திய பெண்ணைத்தங்களுக்குத் தெரியுமென சிலர் தகவலளித்தனர். அதனடிப்படையில், இறந்தது அவ்வளவாகப் பிரபலமில்லாத இயக்குனரொருவரின் மனைவி எனத்தெரியவந்தது.
Add Comment