மிதாஸ் மன்னன் ஒரு வரம் பெற்றிருந்தார். “தொட்டதெல்லாம் பொன்னாக மாற வேண்டும்”. மிகுந்த பெருமிதத்துடன் தன்னைச் சுற்றியிருந்த அனைத்தையும் தகதகவென மாற்றி வரும் போது ஒரு கட்டத்தில் பசித்தது. நான்கைந்து பழங்களை எடுத்தார். தங்கமாக மாறியது! தண்ணீரையாவது குடிக்கலாமென்று போனால், அதுவும் உலோகமாகிவிட்டது. அடுத்தடுத்து உயிருள்ள தனது இளவரசன் வரை தங்கச் சிலையாக மாறிய போதுதான் விபரீதம் புரிந்தது. அழுது புலம்பி, வரத்தை மீளக் கொடுத்துவிட்டார். இந்தக் கதையைப் படிக்காமல் சின்ன வயதைக் கடந்து வந்தவர்கள் யாராவது உண்டா? இதில் வருவது போல ஒரு பொருளை அப்படியே தங்கமாக மாற்றுவது சாத்தியமா? சாத்தியம் என்கிறது அண்மைய அணுப் பௌதிகவியல் பரிசோதனை.
ஆனால் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். கொஞ்சமென்ன, உருவான தங்கம் வெறுத்துவிடுமளவு காசைக் குடிக்கும் பரிசோதனை அது. அணுப் பௌதிகவியல் ஆய்வுகளுக்கான ஐரோப்பிய மையம் (CERN) ஸ்விட்ஸலாந்து, பிரான்ஸ் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. அங்கிருக்கும் ஒரு பெரிய உபகரணம், அதாவது ஓரறை முழுக்க வியாபித்த இயந்திரம், (LHC) அணுத்துணிக்கைகளை வேகமாக ஓட விடக் கூடியது. அதனுள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் துணிக்கைகள் ஓடும். அப்படி ஓடும் போது பல அதிசயங்கள் நடைபெற வேண்டுமென்பது அறிவியலாளர்களின் நம்பிக்கை.















Add Comment