தி லிட்டில் பிரின்ஸ். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுவர் புத்தகம். இதன் மூலப் பிரதி தற்போது ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் ஆரம்ப விலையாக ஒன்றே கால் மில்லியன் டாலர் தொகை, நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது.
லிட்டில் பிரின்ஸின் கதை மிகவும் எளிமையானது. சகாரா பாலைவனத்தில் சிக்கிக் கொள்கிறார் ஒரு விமானி. அவரிடம் இருக்கும் தண்ணீர் தீர்ந்து போவதற்குள் விமானத்தைச் சரி செய்து கிளம்பியாக வேண்டும். அப்போது எதிர்பாராமல் ஒரு சிறுவனைச் சந்திக்கிறார். மூன்று எரிமலைகளும் ஒரே ஒரு ரோஜாச் செடியும் உள்ள சிறு கோளின் இளவரசன் அவன். அந்த இளவரசனின் நீண்ட தேடல்தான் கதைக் கரு. அந்தப் பயணத்தின் வழியாக அவன் கண்டடையும் சின்னச் சின்ன விஷயங்கள் எந்தக் காலத்திற்கும், உலகின் எந்த இடத்திற்கும் பொருந்தும் மானுடத் தரிசனங்களாக விரிகின்றன.
தி லிட்டில் பிரின்ஸ் புத்தகம் இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. பைபிளுக்கு அடுத்த படியாக உலகில் அதிகளவில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் புத்தகம் இதுதான். திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், வானொலி நாடகம், காமிக்ஸ் எனப் பல வடிவங்களில் இந்தக் கதை பிரதியெடுக்கப் பட்டிருக்கிறது.
Add Comment