கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்தத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமை போராளி, அரசியல் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட, தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர். குரோம்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி காலமானார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டு சுதந்திர தினத்திலிருந்து ‘தகைசால் தமிழர் விருது’ வழங்க முடிவு செய்தது. தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இதன் முதல் விருதை சங்கரய்யாவிற்கு அவருடைய நூறாவது பிறந்த நாளின்போது அளித்துப் பெருமை சேர்த்துக்கொண்டது. விருதோடு கொடுக்கப்பட்ட பரிசுப் பணத்தை மக்களுக்கே செலவழிக்க அரசுக்குத் திரும்ப வழங்கினார்.
Add Comment