18 – சோசியலிசமா ஜனநாயகமா?
போரிஸ் நிக்கோலாயவிச் எல்ஸின் (1991-1999), மக்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். ஆயிரம் ஆண்டு ரஷ்ய வரலாற்றில் உருவான முதல் மக்கள் தலைவர். உரல் மலைத்தொடரின் ஒரு கிராமத்தில் பிறந்த, அடக்குமுறைக்கு அடங்காத புரட்சியாளர். இரண்டு தலைமுறைகளாக அவரது குடும்பம் அனுபவித்த சித்ரவதைகளைப் பார்த்து வளர்ந்தவர், வேறெப்படி இருக்க முடியும்..? இந்த உதாரணம் அவரது பதின்பருவச் சாகசங்களில் ஒன்று.
“எறிகுண்டுகளைப் பிரித்துப் பார்த்து, அதனுள் என்ன இருக்கிறது, எப்படி வெடிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே எங்கள் திட்டம். கோயிலுக்குள் இருந்த இராணுவக் கிடங்கிலிருந்து எறிகுண்டுகளைத் திருடும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இருட்டியபின் முள்கம்பி வேலிக்குள் புகுந்து, ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்தேன். இரண்டு RGD – 33 குண்டுகளைத் திருடிவிட்டு பத்திரமாக வெளியேறினேன். நல்லவேளை…. காவலர் கோயிலின் மறுபுறம் இருக்கும்போது, மாட்டிக்கொள்ளாமல் திருடி முடித்தேன். மாட்டியிருந்தால், கேள்வியே கேட்காமல், பார்த்தவுடன் என்னைச் சுட்டுத் தள்ளியிருப்பார்.” என்று தன் சுயசரிதையில் நினைவுகூர்கிறார் எல்ஸின்.
Add Comment